வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் கடுமையாகத் தடுத்து வருகின்றனர்
வன்னியில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு வரவே விரும்புகிறார்கள் எனவும், எனினும், மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் கடுமையாகத் தடுத்து வருவதாகவும் அந்தப் பிரதேசத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரப் பிற்பகுதியில் அங்கிருந்து வெளியேற முற்பட்ட பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பொதுமக்கள் கால்களில் கடுமையாகக் காயமடைந்திருப்பதாக அங்கிருக்கும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்கள் அனைவரும் கால்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இது தவிரவும், வெளியேற முற்படும் பொதுமக்கள் மீது மட்டைகள், பொல்லுகளால் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் பிரதேசவாசிகள் எமக்குத் தகவல் தெரிவித்தனர்.
வெளியேற முற்படும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதால், மக்கள் மிகவும் அச்சமடைந்து காணப்படுவதாக அவர்கள் எமக்குத் தகவல் தெரிவித்தனர்.
உணவுத் தட்டுப்பாடு
இதேவேளை, அங்கு உணவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், பசியால் மக்கள் மிகவும் துன்பப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். உணவுத் தட்டுப்பாடு காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றை உடைத்து மக்கள் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர்கள் எமக்குத் தகவல் தெரிவித்தனர்.
உணவுப்பொருள் தட்டுப்பாடு, மருந்துகள் இன்மை, சுகாதார வசதிகள் இல்லாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், எறிகணைத் தாக்குதல்களுக்கும் முகம்கொடுக்கும் நிலையில் அங்கிருந்து வெளியேறவே விரும்புவதாகவும், எனினும், விடுதலைப் புலிகளின் கடுமையான நடவடிக்கை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமல் மக்கள் அந்தரத்தில் இருப்பதாகவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
மோதல் நிறுத்தத்தால் பயனில்லை?
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்து வருவதாகவும், அவர்கள்மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதாக கூறிவரும் ஐக்கிய நாடுகள் சபையும், பல சர்வதேச நாடுகளும், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.
மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக மீண்டும் மோதல் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் இவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
எனினும், மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக தாம் அறிவித்த 48 மணிநேர மோதல் நிறுத்தக் காலத்தில் பெரியளவில் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய, இந்த நிலையில், மீண்டும் மோதல் நிறுத்தம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
“இந்தக் காலப்பகுதியில் 5,000 அல்லது 10,000 பொதுமக்களாயினும் அங்கிருந்து வெளியேறியிருந்தால், மீண்டும் மோதல் நிறத்தம் செய்து மேலும் மக்கள் அங்கிருந்து வெளியேற வகைசெய்யலாம். அப்படி நடக்காத நிலையில், மோதல் நிறுத்தம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை” என்று கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேனனுக்கும் விளக்கிக் கூறியிருப்பதாகக் கூறும் அவர், களநிலைமைகளைச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் அமெரிக்கா தொடர்ந்து மோதல் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா இவ்வாறு செயற்படுவதாகவும், இதற்காக தாம் எதுவும் செய்ய முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply