முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்கள் 30 பேரும் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்திருக்கின்றன. ஆளுங்கட்சியினர் எப்படியெல்லாம் கொள்ளை அடித்தனர்; அப்பணத்தில் ஒரு பகுதியை எப்படி வாக்காளர்களுக்கு கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க முயன்றனர் என்பது குறித்த உண்மைகள் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளராக போட்டியிடும் தினகரனை வெற்றி பெறச்செய்வதற்காக ஒட்டுமொத்த அரசு எந்திரமும் களமிறங்கி பணியாற்றி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 31 அமைச்சர்களும் கடந்த 3 வாரங்களாக அரசுப் பணிகளை மேற்கொள்ளாமல் தினகரனுக்காக வாக்கு சேகரிக்கும் பணியை மட்டுமே செய்கின்றனர்.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் கடந்த 4-ம் தேதி இரவு தலா ரூ.4000 வீதம் பணம் வழங்கப்பட்டதாகவும், பணம் வழங்குவதை தடுத்த தி.மு.க. வினர் இருவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் கடந்த 5-ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாற்றியிருந்தேன்.
அடுத்த இரண்டாவது நாளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் இக்குற்றச்சாற்று உண்மை என்பது உறுதியானது.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மொத்தமுள்ள 2,63,696 வாக்காளர்களில் 85 விழுக்காட்டினருக்கு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு 2,24,145 பேருக்கு தலா ரூ.4000 வீதம் மொத்தம் 89.65 கோடி பணம் வினியோகிக்கப்பட்டதற்கான குறிப்புகள் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பணத்தை முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தலைமையிலான 7 குழுக்கள் தான் வினியோகித்துள்ளன.
பழனிச்சாமி தலைமையிலான குழு 33193 வாக்காளர்களுக்கு ரூ.13.27 கோடியும், மூத்த அமைச்சர் செங்கோட்டையன் குழு 32,830 பேருக்கு ரூ.13.13 கோடியும் வினியோகித்துள்ளனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்ரூ.12.83 கோடி, தங்கமணி ரூ.12.67 கோடி, வேலுமணி ரூ.14.91 கோடி, ஜெயக்குமார் குழு ரூ.11.68 கோடி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் குழு ரூ.11.13 கோடி வீதம் வாக்காளர்களுக்கு வினியோகித்ததை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவணங்களில் பதிவு செய்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 7 பேர் தலைமையிலான குழுக்களில் இளம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். உதாரணமாக வேலுமணி தலைமையிலான குழுவில் விஜயபாஸ்கர், வீரமணி, முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, கோகுல இந்திரா, மாதவரம் மூர்த்தி, பழனியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாறாக அனைத்து அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்திய அரசியல் சாசனத்தின்படி முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவியேற்றவர்கள் இப்போது அரசியல் சட்டத்திற்கு எதிரான வகையில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததன் மூலம் அமைச்சர்களாக பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(1)(ஏ) பிரிவுகளின்படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுப்பது குற்றமாகும்.
இக்குற்றத்திற்காக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 171(இ), (எப்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும். இதன்முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
ஆனால், ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், அதுவும் அந்த பணத்தை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் தான் அளித்தனர் என்பதற்கு ஏராளமான ஆதாரம் கிடைத்துள்ள நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்குவதன் காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வரித்துறை தானாக ஆய்வு நடத்தவில்லை. மாறாக, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் வருமானவரித் துறை ஆய்வு நடத்தி ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறது.
சில அரசியல் காரணங்களுக்காகவும், சில கட்சிகளின் அரசியல் லாபத்துக்காகவும் இந்த ஆவணங்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்கு கசிய விடப்பட்ட நிலையில், இந்த ஆவணங்கள் நிச்சயமாக தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.
பொதுத்தேர்தலின்போது தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் இதைவிட குறைந்த தொகை ஓட்டுக்கு கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்த போது இரு தொகுதிகளின் தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணையம், ராதா கிருஷ்ணன்நகர் தொகுதி இடைத் தேர்தல் பண வினியோகம் குறித்து ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ள நிலையில் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க தாமதிப்பது ஏன்?
1971-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திரா காந்தி, அரசு அதிகாரியை தமக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தினார் என்பதற்காக அவரது வெற்றியே செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஒட்டு மொத்த அரசு எந்திரமும் தினகரனுக்காக பணியாற்றும் நிலையில் அதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பதற்கான காரணத்தை சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ராதாகிருஷ்ணன்நகர் தொகுதியில் சட்டத்தை வளைத்து வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டிருப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்.
வருமானவரி ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை உரிய புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்டு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அனைத்து அமைச்சர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply