கேப்பாப்புலவில் 150கோடி உல்லாச விடுதியை பாதுகாக்க பணத்தை அள்ளி இறைக்கும் இராணுவம்!
கேப்பாபுலவு படைத்தளத்தினுள் 150 கோடி ரூபா பெறுமதியான பாரிய உல்லாச விடுதியினை பாதுகாக்கும் நோக்கில் 138 குடும்பங்களின் காணிக்குப் பதிலாக பணத்தினை அள்ளி இறைப்பதற்கு படைத்தரப்பு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு வாழ் 138 குடும்பங்களின் காணிக்குப் பதிலாக புதிய காணியும் பணமும் வழங்குவதான கோரிக்கை ஒன்றினை மக்களிடம் முன் வைப்பதற்கு படைத் தரப்பினால் புதிய முயற்சி ஒன்று முன் எடுக்கப்படுகின்றது.
குறித்த முயற்சியின் பிரகாரம் படை அதிகாரிகள் அரச அதிகாரிகளிடம் குறித்த தகவலை நேற்றைய தினம் தெரியப்படுத்தியுள்ளனர்.
அதன் பிரகாரம் 138 குடும்பங்களால் கோரப்படும் தமது நிலம் 482 ஏக்கர் என அடையாளப்படுத்தும் நிலையில் 142.5 ஏக்கர் நிலம் மக்களின் குடியிருப்பிற்கான அனுமதிப் பத்திரக் காணியாகவும் உள்ளது. இப் பகுதியில் மொத்தம் 760 ஏக்கர் நிலப்பரப்பினில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறு படையினர் மொத்தமாக கையகப் படுத்தியுள்ள 760 ஏக்கரில் இருந்து 279 ஏக்கர் நிலத்தினை மட்டுமே விடுவிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த 279 ஏக்கர் நிலப்பரப்பும் வனப்பகுதியாகவே உள்ளது.
அதாவது இந்த 138 குடும்பங்கள் வாழ்ந்த 142.5 ஏக்கர் நிலம் இப் பகுதிக்குள் உள் அடங்கவே இல்லை. மக்களின் வாழ்விடப்பகுதியான குறித்த 142.5 ஏக்கர் நிலத்தின் சுமார் 30 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளடங்குகின்றது. இதனால் தம்மால் வழங்கப்படும் 279 ஏக்கர் நிலத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு தமது பூர்வீக நிலத்தினை விடுவிக்க மக்களால் எழுத்தில் இணக்கம் வழங்கப்படுமாயின் பழைய நிலத்திற்கான பணமும் வழங்குவதாகவும் அந்த நிலங்களில் ஏற்கனவே வீடுகளுடன் வாழ்ந்த குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 14 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியிலான ஓர் புதிய வீட்டினை அமைத்துக் கொடுப்பதற்கும் இணங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு இணங்காத பட்சத்தில் மக்களின் சொந்த நிலமே வழங்குவதானால் அப்பகுதிக்குள் தம்மால் அமைக்கப்பட்டுள்ள இரு அடுக்குமாடி கட்டிடங்களை அகற்றவேண்டிய நிலமை உள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த கட்டிடங்களின் தற்போதைய சந்தைப் பெறுமதி 150 கோடி ரூபா எனவும் படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வறுமையில் வாடும் மக்களிடம் பணத்தின் அடிப்படையில் பேரம் பேசும் முயற்சிக்கு படைத்தரப்பினர் தற்போது அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து 8 ஆண்டுகளாக குந்தியிருந்த படையினரால் அந்த நிலங்களை விட்டு அகல மனம் இல்லை எனில் பரம்பரையாக வாழ்ந்த நிலத்தினை எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply