டிடிவி தினகரன் கண்டிப்பாக நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!

இங்கிலாந்தில் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக, டிப்பர் இன்வேஸ்மெண்ட் மூலமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான காசோலையில் தினகரன் கையெழுத்து இருப்பது 1996 ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு டி.டி.வி தினகரன் பதிலளிக்கும் போது நான் இந்திய குடிமகன் அல்ல, சிங்கப்பூர் குடிமகன் எனக் கூறியிருந்தார். வெளிநாட்டில் சம்பாதித்த பணம் எனவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் தினகரன் இந்திய குடிமகன் தான் என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இதன் மூலம் தினகரனுக்கு இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததால், வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் 12 சாட்சியங்களும், 85 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட், டெண்டி இன்வெஸ்ட்மெண்ட், பேனியன் ட்ரியின் நிறுவனங்கள் பணப்பரிவர்த்தனை அனைத்தும் இங்கிலாந்து பார்க்லே வங்கியில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளது. 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், 1 லட்சம் பவுண்டும் வங்கியில் இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக 3 சாட்சிகள் 39 ஆவணங்களும் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. தினகரன் மீதான இரு வழக்குகளின் குற்றச்சாட்டானது அமலாக்கத்துறை தரப்பில் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தினகரன் தரப்பில் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அமலாக்கதுறை வாதத்த்தை மட்டும் வைத்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள முடியும். குற்றச்சாட்டுகுள்ளானவரின் கருத்தை கேட்க அவசியமில்லை என தெரிவித்தார். இன்று இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது தினகரன் தரப்பில், ஜூனியர் வழக்கறிஞர் ஆஜராகி வாய்தா கேட்டு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் மீதான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு விட்டன. ஆனால் தினகரன் தரப்பு வாதம் மட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, வழக்கை உடனடியாக முடித்துவைக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

பின்பு, மதிய நேரத்தில் தினகரனின் சீனியர் வழக்கறிஞர், நீதிபதி முன்பு ஆஜராகி மீண்டும் வாய்தா கேட்டு கோரிக்கை விடுத்தார். அப்போதும் நீதிபதி மறுப்பு தெரிவிக்க, தினகரனின் வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்த விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப் படவேண்டும் எனக்கூறினார். இதனால் அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தனக்கு இந்த வழக்கு தொடர்பாக எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை எனக்கூறிய மலர்மதி, வரும் ஏப்ரல் 19, 20 தேதிகளில் தினகரன் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply