இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் : டிடிவி. தினகரன்

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது.அ.தி.மு.க. அம்மா அணி என்று சசிகலா தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்த இரு அணியினரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். ஆனால் இரு அணிக்கும் இரட்டை இலை சின்னத்தை வழங்காமல் அதை முடக்கி வைத்து தலைமை தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

இது தொடர்பான விசாரணை தற்போது தலைமை தேர்தல் கமி‌ஷனில் நிலுவையில் உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணியினரும் மீண்டும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரட்டை இலைக்கு உரிமைக்கோரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதற்கான ஆவணங்களை ஏற்கனவே ஒப்படைத்துள்ளனர். அவர்கள் சுமார் 42 லட்சம் உறுப்பினர்களின் விவரங்களுடன் கூடிய ஆவணத்தை தாக்கல் செய்துள்ளனர்.

சசிகலா அணியினரும் அதுபோன்று ஆவணங்களை தயார் செய்து வருகிறார்கள். அந்த ஆவணங்களை ஒப்படைப்பதற்கு அவர்கள் தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் இரண்டு மாத கால அவகாசம் கோரி கடிதம் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் இன்று தலைமை தேர்தல் கமி‌ஷனில் நடைபெறுவதாக உள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற சசிகலா தரப்பினர் ரகசிய பேரத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி விவரம் வருமாறு:-

டெல்லி போலீசாருக்கு நேற்று இரவு உளவுத்துறையினர் ஒரு தகவலை தெரிவித்தனர். அதில் ஒரு ஓட்டலில் மர்ம நபர் ஒருவர் தங்கியிருப்பதாக கூறி எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகத்தின் பேரில் சுகேஷ் சந்திர சேகரராவ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த அவரிடம் ரொக்கமாக ரூ.30 லட்சம் இருந்தது. அந்த பணம் பற்றி கேட்டபோது அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது புத்தம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கத்தை கத்தையாக சிக்கின. அதில் ரூ.1 கோடி இருந்தது. அந்த பணத்துக்கும் அவரால் சரியான விளக்கம் அளிக்க இயலவில்லை.

போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்திருப்பதாக கூறினார். இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டு இருப்பதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அப்போதுதான் அவர் இடைத்தரகர் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அ.தி.மு.க. அம்மா அணியினரிடம் தனக்கு தேர்தல் கமி‌ஷனில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தெரியும் என்றும் இரட்டை இலை சின்னத்தை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்றும் கூறி அவர் கோடிக்கணக்கில் பணம் பெற்று வந்திருப்பதாக தெரிய வந்தது.

போலீசாரிடம் அவர் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் பெயரை குறிப்பிட்டார்.

இதையடுத்து அவர் வைத்திருந்த ரூ.1.30 கோடியை டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள். அவருக்கு சொந்தமான ஒரு பி.எம்.டபிள்யூ மற்றும் மெர்ஸ்சிடஸ் பென்ஸ் கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிறகு அவரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று பிற்பகல் அவரை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற முறைகேடாக குறுக்கு வழியில் பேரம் பேசியது தொடர்பாக டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்பட சிலரது பெயர் இடம் பெற்றுள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இரட்டை இலை சின்னத்திற்காக ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதா? என்பது பற்றி தினகரனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக தினகரனுக்கு சம்மன் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆக தினகரன் டெல்லி செல்ல வேண்டியது இருக்கும்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற கோடிக்கணக்கில் பேரம் நடந்திருப்பதை டெல்லி போலீசார் அறிக்கையாக தயாரித்துள்ளனர். அந்த அறிக்கை தலைமை தேர்தல் கமி‌ஷன் மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனில் உள்ள அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க சசிகலா அணியினர் முயற்சி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் கமி‌ஷன் புதிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சசிகலா அணிக்கு எதிராக அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று முயற்சி செய்த சசிகலாவுக்கு அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. முதலில் அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குள் இருக்கிறார்.

அடுத்து அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் மீது ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் சின்னத்தை கைப்பற்ற லஞ்சம் கொடுத்து இருப்பதாக குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார்கள்.

இது சசிகலா தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து வழக்குகளும், விசாரணைகளும் பாய்வதால் சசிகலா குடும்பத்தினர் நிலைகுலைந்துள்ளனர்.

சசிகலா-தினகரன் மீது அடுத்தடுத்து முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால் அ.தி.மு.க. வட்டாரத்தில் கடும் அதிருப்தி நிலவுகிறது. எனவே வரும் நாட்களில் அ.தி.மு.க.வில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும் என்று பேசப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply