நாட்டுக்காக தூக்குமரம் ஏறுவேனே தவிர ஒரு போதும் காட்டிக்கொடுக்க முற்படேன்:ஜனாதிபதி

ஹிட்லராக வர்ணித்து என்னை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நாட்டுக்காகத் தூக்குமரம் ஏறுவே னேயன்றி தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்க ஒருபோதும் துணிய மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யுத்த நிறுத்தம் செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் சர்வதேச சமூகம் வன்னி மக்கள் சுயமாகத் தீர்மானிப்பதற்கு அவகாசமாக பிரபாகரனிடமிருந்து ஒரு மணித்தியாலத்தைப் பெற்றுக் கொடுக்க முன்வருமா எனவும் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற முயல்வதால் நாடு வங்குரோத்து அடைந்துவிட்டதாக அர்த்தமில்லை. அந்நிதி எனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தவுமல்ல, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காகப் பயன்படுத்துவதற்கே என்பதை சகலரும் உணர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச மருத்துவத்துறை, விவசாயத்துறைசார்ந்த மற்றும் சமாதான நீதவான்கள் பங்கேற்ற நிகழ்வொன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, நிமல் சிரிபால டி சில்வா, ஹேமகுமார நாணயக்கார, திஸ்ஸ கரலியத்த, பதில் அமைச்சர் பீ. புத்திரசிகாமணி உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

நாடு முக்கியமானதொரு காலகட்டத்தைச் சந்தித்துள்ளது. கடந்த 30 வருட காலமாக புலிகளிடம் அகப்பட்டிருந்த பெரும் பகுதி கைப்பற்றப்பட்டுவிட்ட வரலாற்றின் முக்கிய மைல்கல் இது.

அப்பகுதியிலுள்ள அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், டாக்டர்கள் உட்பட சகலருக்கும் அரசாங்கமே சம்பளம் வழங்கி வருகிறது.

ஆனால் புலிகளே அவர்களை நிர்வகித்தனர். தற்போது புலிகளிடமிருந்து அனைத்துப் பகுதிகளும் கைப்பற்றப்பட்டுவிட்டன. புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக்கி வைத்துள்ள பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது.

இப்போது மனிதர்களைப் பலிகொள்ளாது பிரபாகரன் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைந்து நாட்டு சட்ட திட்டத்துக்கு மதிப்பளிக்க அவர் முன்வர வேண்டும். இல்லையெனில் அவர் கடலுக்குள் பாய்வது, சயனைட் அருந்தித் தன்னை மாய்த்துக் கொள்வதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.

தமிழ், சிங்கள புதுவருடத்தையொட்டி 48 மணித்தியால யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தோம். அதனை மேலும் நீடிக்குமாறு சர்வதேச சமூகம் கோருகிறது. அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச சமூகம் பிரபாகரனுக்கு அழுத்தம் கொடுக்கட்டும்.

என்னையும், பாதுகாப்புச் செயலாளரையும், இராணுவத் தளபதியையும் ஹிட்லராக வர்ணித்து சர்வதேச இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்காகத் தகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். நாட்டிற்காக தூக்கு மரம் ஏறவும் துணிவேனே தவிர நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டேன். தாய் நாட்டைப் பாதுகாப்பதே எமது தலையாய கடமை.

எமக்குப் பொறுப்பு உள்ளது. நாளைய சந்ததிக்காக அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலேயே மேல் மாகாண சபைத் தேர்தல் வருகிறது. நாட்டை மீளக் கட்டியெழுப்பும் யுகத்தில் மக்கள் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.

இத்தருணத்தில் மக்களின் ஆதரவே சர்வதேசத்திற்கு நாம் வழங்கும் முக்கிய செய்தியாக அமையும். நாம் மேற்கொள்வது மனிதப் படுகொலையல்ல; மக்களை மீட்கும் மனிதாபிமானப் பணியே என்பதை இதன் மூலம் சர்வதேசம் அறிந்து கொள்ளும் என்பதை நாம் உணர வேண்டும்.

நாம் யுத்தத்தை விற்றுப் பிழைக்கத் தயாரில்லை. முப்பது வருட காலம் தொடர்ந்த யுத்தத்தை எம்மால் மூன்று வருடத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடிந்துள்ளது. நாம் யுத்தத்தை மட்டும் நடத்தாமல் பாரிய அபிவிருத்தியையும் நாட்டின் சகல பகுதிகளிலும் மேற்கொண்டுள்ளோம்.

எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்காகவே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுகிறோம். எமக்கு அதனை மீளச் செலுத்தக் கூடிய பலமும் உள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்:

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply