தேர்தல்களுக்கு ல.சு.க தயார் கட்சியின் பலம் மேதினத்தில் தெரிய வரும்
எத்தகைய தேர்தல்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். அரசாங்கம் இவ்வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் நடத்துவதும் உறுதி என குறிப்பிட்ட அவர், எவராலும் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமானதாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் மக்கள் செல்வாக்கை இம்முறை மே தினம் வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் ‘சிராவஸ்தி’யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்தும் விளக்கமளித்த முதலமைச்சர்; எவர் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டாலும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது.
எதிர்வரும் செப்டம்பரில் மூன்று மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளன. அந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் மற்றும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலும் இந்த வருடத்தில் நடத்தப்படும்.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திப் போட முடியாது என்பதால் அந்த தேர்தல்கள் நடத்தப்பட்ட பின் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும். இதுவே அரசாங்கத்தின் தீர்மானமாகும். எனினும் சிலவேளைகளில் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் முந்தலாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கிராம மட்டத்திலிருந்து சகல மட்டங்களிலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சியினால் இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த இலக்கை வெற்றிகொள்ள அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
மே தினத்தைப் பொறுத்தவரை கண்டி மற்றும் கொழும்பைத் தவிர ஏனைய ஒவ்வொரு தொகுதி அமைப்பாளரும் 500 பேரை மேதினத்துக்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
அதேபோன்று கூட்டு எதிர்க் கட்சியினர் எந்த நேரத்திலும் எம்மோடு இணைந்து செயற்படலாம், அதற்கான கதவுகள் திறந்துள்ளன. எந்த தேர்தலிலும் அவர்கள் எம்மோடு இணைய முடியும் இம்முறை மேதினத்தில் கூட அவர்கள் இணையலாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கும் சகலரையும் இணைத்துக் கொண்டு முன்செல்வதே கட்சியினதும் தலைமையினதும் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply