விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: நோர்வே எழுத்தாளர் ஜான் ஹோர்ன்

புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டங்களால் நோர்வே மக்கள் மிகவும் களைப்படைந்து இருப்பதாகவும், இவ்வாறான போராட்டங்களால் ஏற்படும் தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாதிருப்பதாகவும் நோர்வே எழுத்தாளர் ஜான் ஹோர்ன் தெரிவித்துள்ளார். “நோர்வேயிலுள்ள தமிழர்கள் சிறந்த முறையிலேயே நடத்தப்பட்டனர். ஆனால், புலிகளின் முட்டாள் தனமான செயற்பாட்டுக்காக அவர்களில் சிலர் தற்பொழுது நோர்வேயைக் குற்றஞ் சாட்டுகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.

“இந்தத் தமிழர்கள் பிரதமர் அலுவலத்தை மறித்துப் போராட்டங்களை நடத்தியும், இலங்கைத் தூதரகத்தைச் சேதமாக்கியும் நகரை முடங்கச் செய்ய முயற்சிக்கின்றனர். நிலைமை கையை மீறிச் சென்றிருப்பதுடன், தமது நாட்டில் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு உதவிய நோர்வே மக்களுக்கு இவற்றைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதே தமது நம்பிக்கை” என அந்த எழுத்தாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல்கள், பட்டினி மற்றும் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள் மற்றும் மக்களுக்கு உதவிவழங்கும் நீண்டகால கலாச்சாரத்தைக் கொண்ட நாடான நோர்வே, உலகத்திலேயே புகழ்வாந்த நோபல் பரிசை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“எமது பெருந்தன்மையை பலவீனத்துக்கான அடையாளமாகக் கொள்ளக்கூடாது. உலகளாவிய ரீதியில் 30ற்கும் அதிகமான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. 4.5 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நோர்வேயால் அவை அனைத்தையும் தீர்க்கமுடியும் என எதிர்பார்க்க இயலாது” என்றார் ஜான் ஹோர்ன்.

அதேநேரம், நோர்வே சமாதான அனுசரணையாளர்களேயன்றி, அவர்களால் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்க முடியாது என விடுதலைப் புலி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டியன் ஸ்ரோக் கூறியுள்ளார்.

“சமாதான அனுசரணையாளர்களான நோர்வேயால், இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்க முடியாது. தமது பிழைகளைப் பரிசீலித்து அரசியல் தீர்வொன்றுக்குச் செல்ல சம்பந்தப்பட்ட தரப்பினராலேயே முடியும். இரண்டு தரப்பும் பேச்சுக்கு வருமாறு எம்மால் அழைப்புவிடுக்க மாத்திரமே எம்மால் முடியும்” என்றார் பேராசிரியர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply