டி.டி.வி.தினகரன் சட்டவிரோத வழியில் பணத்தை டெல்லிக்கு அனுப்பினார் விசாரணை அதிகாரி தகவல்
டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது குறித்து இந்த வழக்கில் விசாரணை நடத்திய டெல்லி போலீஸ் துணை கமிஷனர் மாத்தூர் வர்மா நேற்று கூறியதாவது:-
டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெறுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினோம். அப்போது அங்கு ரூ.1 கோடியே 30 லட்சத்துடன் இருந்த பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தோம்.
முதலில் அவர் தன்னை மத்திய மந்திரியின் மகன் என்றும், ஆந்திராவை சேர்ந்த ஆளும் கட்சி எம்.பி.யின் மகன் என்றும் மாறி, மாறி கூறினார். இதனால் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் அவர் பழைய குற்றவாளி என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து, அதில் யார், யாரிடம் பேசினார் என ஆய்வு செய்தோம். அதில் அவர் பெங்களூருவைச் சேர்ந்த மல்லிகார்ஜூனா, சென்னையைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், வக்கீல் குமார் ஆகியோரிடம் தொடர்ந்து பேசியதை கண்டறிந்தோம். டெல்லியை சேர்ந்த பைசலிடமும் தொடர்ச்சியாக அவர் பேசி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தான் நாங்கள் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 5 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினோம். அப்போது தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது பற்றிய முழுமையான தகவல் எங்களுக்கு கிடைத்தது.
மல்லிகார்ஜூனா, அ.தி.மு.க. வுக்கு மிகவும் நெருக்கமானவர். பெங்களூரு சொத்து குவிப்பு வழக்குக்காக அ.தி.மு.க.வினர் அடிக்கடி பெங்களூரு வந்தபோதும், அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வழி கிடைக்குமா? என்று விசாரித்த போதும் தான் மல்லிகார்ஜூனா அறிமுகம் அ.தி.மு.க.வினருக்கு கிடைத்து உள்ளது.
அந்த நெருக்கத்தில் மல்லிகார்ஜூனா சென்னையை சேர்ந்த வக்கீல் குமாரிடம், சுகேஷை அறிமுகம் செய்தார். அப்போது அவர் “சுகேஷ் சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் பல அதிகாரிகளுடன் நெருக்கமானவர். ஆளும் கட்சியின் எம்.பி. மகன். அவர் நினைத்தால் பல வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியும். ஐகோர்ட்டு நீதிபதிகள் பலரை அவருக்கு தெரியும். அவரிடம் பேசுங்கள்” என்று கூறியுள்ளார்.
பின்னர் குமார், சுகேஷ் குறித்து தினகரனிடம் தெரிவித்தார். மேலும் இரட்டை இலையை மீட்க சுகேஷிடம் பேச ஆலோசனை கூறியுள்ளார்.
இதனால் சுகேஷிடம் தினகரன் தொடர்ச்சியாக பேசி வந்தார். அதன்பின்னர் தான் ரூ.50 கோடி பேரம் நடந்துள்ளது. இந்த பணத்தை பைசல் உதவியுடன் சுகேஷிடம் வழங்குவது என முடிவு எடுத்தனர். அதன்படி பைசல் தான் முன்பணமாக ரூ.1.30 கோடி கொடுத்துள்ளார்.
சுகேஷ் கைதானதில் இருந்தே டி.டி.வி.தினகரனின் செயல்பாட்டை கண்காணித்து வந்தோம். சட்டவிரோத வழி மூலமாக பணத்தை டெல்லிக்கு அனுப்பியதால் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு உதவியாக இருந்ததால் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைதானார்.
சுகேஷிடம், தினகரன் பேசியதற்கான ‘ஆடியோ டேப்’ ஆதாரங்களை நாங்கள் கைப்பற்றினோம். அதில் முழுமையாக அவர்கள் இருவரும் பேசியது பதிவாகி உள்ளது.
சுகேஷிடம், டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பேசியுள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டு இருக்கிறோம். தேர்தல் அதிகாரிகள் யாரிடமாவது சுகேஷ் தொடர்பு கொண்டாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply