சமஷ்டி தீர்வு இலங்கைக்கு பொருத்தமானது : ராஜித சேனாரத்ன
தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இலங்கைக்குப் பொருத்தமானது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, ‘தந்தை செல்வா நினைவுப் பேருரை’ நேற்று மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ‘இலங்கையில் அதிகாரப் பகிர்வு’ என்ற தலைப்பில் ராஜித சேனாரத்ன நினைவுப் பேருரை நிகழ்த்தினார். தந்தை செல்வா சமஷ்டியைத் தீர்வாக முன்வைத்தார்.
அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வேறு தெரிவுகள் இல்லாமல் தமிழீழக் கோரிக்கையை அவர் தெரிவு செய்தார். இதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளே காரணம். இன்னமும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்தான்.
சமஷ்டி என்பது பிரிவினை என்று சிங்கள மக்கள் அஞ்சுகின்றார்கள். இது தொடர்பில் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனைச் செய்ய வேண்டும். அதிகாரங்கள் என்பது மையத்தில் இருக்கக்கூடாது.
சமஷ்டி இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் தேவை. தீர்வைக் காணும் நடவடிக்கைகள் மந்த கதியில் இருக்கின்றமை உண்மைதான். இப்போது சரியான தீர்வைக் காண வேண்டும். இரண்டு தேசங்கள் இந்த நாட்டை ஒரு தாய் நாடாக ஏற்பதற்கு, இரண்டு தேசங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
அதிகாரங்கள் பகிரப்பட்டால்தான் இரண்டு தேசங்களும் சிநேகபூர்வமாக இந்த நாட்டில் வாழலாம் என்று தந்தை செல்வநாயகம் குறிப்பிட்டிருந்தார்.அது சரியானது. தந்தை செல்வா கூறிய சமஷ்டி முறைமைதான் எமது நாட்டுக்குப் பொருத்தமானது” – எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply