வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.சில மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டார்.வருடத்தின் முதல் 4 மாதங்களில் நாடு பூராகவும் சுமார் 40,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் கூறினார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், புத்தளம், காலி, மாத்தறை, கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தீவிர காய்ச்சலுடன் கூடிய உடல் வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுமாயின், உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது உகந்தததாகும் என சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.

தாமதமாக சிகிச்சைகளைப் பெறுவதால், நோய்த் தாக்கம் அதிகரிப்பதுடன், மரணம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, குருநாகல் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 100 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சந்தன கெதன்கமுவ குறிப்பிட்டார்.

இதேவேளை, அங்கொடை தொற்றாத நோய்கள் தொடர்பான ஆய்வுப் பிரிவிலும் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகள் பலவற்றிலும் டெங்கு நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

டெங்கு நுளம்புகள் பரவாமல் சூழலை துப்புரவாக வைத்திருத்தல் அவசியம் எனவும் சுகாதார தரப்புகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply