மக்கள் வெளியேற்றப்பட்டதை வரவேற்றார்: பான்கீ மூன்

இலங்கையின் வடபகுதியிலுள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியமையை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் வரவேற்றுள்ளார். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்குண்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டிருக்கும் மக்களில் நேற்று திங்கட்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இதனை வரவேற்றிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன், விடுவிக்கப்படாது எஞ்சியிருக்கும் மக்கள் குறித்துக் கவலை வெளியிட்டிருப்பதுடன், குறுகிய பகுதியான பாதுகாப்பு வலயத்தை நோக்கி அரசாங்கப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்துவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.அதேநேரம், பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வைத்துள்ளமை குறித்தும் பான்கீ மூன் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருப்பதாக அவரின் பேச்சாளர் கூறியுள்ளார்.

வெளியேற்றப்பட்டிருக்கும் மக்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை, முகவர் நிலையங்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “மக்களை வெளியேற்றுவதற்கும், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான நிவாரணப் பொருள்களை வழங்குவதற்கும் ஐ.நா. பணியாளர்கள் மோதல் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்” எனவும் பான்கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் பலர் இடம்பெயர்ந்து வந்திருப்பதால் அவர்களை வரவேற்றுத் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளில் மனிதநேய அமைப்புக்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகிறது.  புதிதாக வந்தவர்களுக்கான உணவு, கூடாரங்கள், மருந்துப் பொருள்கள் மேலதிமாகத் தேவைப்படுவதாக ஐ.நா. முகவர் அமைப்புக்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply