தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்: ஸ்டாலின்
தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாநில அரசு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறது. இலங்கை அரசுடனும், மீனவ பிரதிநிதிகளுடனும் இதுவரை நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளின் விளைவாகவும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, மீனவர்கள் கைது செய்யப்படுவது அனைத்தும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏப்ரல் 30-ந்தேதி ராமநாதபுரம் மீனவர்களை ஐந்து பேரை கைது செய்து இலங்கை ராணுவம் சிறையில் அடைத்து இருக்கிறது.
மே 3-ந்தேதி கூட மீன் பிடிக்கச் சென்ற நான்கு நாகை மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் கட்டையால் தாக்கி காயப்படுத்தி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புவார்களா என்ற அச்சத்தில் தமிழக மீனவர்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை இன்னும் தொடருகிறது. தாக்குதலும், கைதும் நீடிக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு “வடக்கு மாகாண மீனவர்கள் அனுமதித்தால் மட்டுமே இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியும்” என்று இலங்கை அரசின் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனைத்து தரப்பு பிரதிநிதிகளுடன் இந்திய அரசின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று “படகுகளை விடுவிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்” என்று இலங்கை அரசின் சார்பில் உத்தரவாதம் அளித்த பிறகு திடீரென்று வடக்கு மாகாண மீனவர்கள் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.
தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பிக் கொடுப்பதற்கு வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது போன்ற கருத்தை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விதைக்க முயன்றிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்நிலையில் மே 12 முதல் 14 வரை இலங்கையில் நடைபெறும் “புத்த பூர்ணிமா” விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி இலங்கை செல்வதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இந்திய பிரதமரின் இந்த பயணம் புத்த பூர்ணிமா விழாவிற்காக என்று இலங்கை தரப்பிலிருந்து கூறப்பட்டாலும், நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருக்கும் “தமிழக மீனவர்களின் படகுகள்” பிரச்சனைக்கு நல்லெண்ண அடிப்படையில் தீர்வு காண இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுவரை இலங்கை அரசு இந்திய மீனவர்களின் 134 படகுகளை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. அதில் பல படகுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன என்று அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சரே கூறியிருக்கிறார்.
ஆகவே இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திரமோடி தமிழக மீனவர்களின் 134 படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், வடக்கு மாகாண மீனவர்கள் மீது பலி போட்டு இலங்கை அரசு தப்பிக்க முனையாமல், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கருதியும், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் கருதியும் இந்த 134 படகுகளையும், கைது செய்யப்பட்டுள்ள 5 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply