தென்கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜயே-இன் வெற்றி: அமெரிக்கா-ஜப்பான் வாழ்த்து

தென்கொரிய அதிபராக இருந்த பார்க் ஜியூன் – ஹை ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நடந்தது.ஜனநாயக கட்சி சார்பில் மூன் ஜயே-இன்னும், கன்சர் வேடிவ் கட்சி வேட்பாளராக ஹாங் ஜோன்-பையோவும், மிதவாதியான அகின் சியோல்- சூ ஆகியோர் போட்டியிட்டனர்.நேற்று அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

தொடக்கத்தில் இருந்தே ஜனநாயக கட்சி வேட்பாளர் மூன் ஜயே-இன் முன்னணியில் இருந்தார். முடிவில் அவர் அபார வெற்றி பெற்றார். அவர் 41.1 சதவீத வாக்குகள் பெற்றார்.

கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஹாங்ஜோன் பையோ 2-வது இடம் பிடித்தார். அவருக்கு 24.03 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. மிதவாதியான அகின் சியோல்-சூ 3-வது இடம் பிடித்தார். அவர் 21.4 சத வீதம் ஓட்டுகள் பெற்றார்.

மூன் ஜயே-இன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சியோல் நகரமே விழாக்கோலம் பூண்டது. அவரது ஆதரவாளர்களும், கட்சி தொண்டர்களும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆரவாரம் செய்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பு ஏற்க இருக்கும் மூன் ஜயே-இன்னுக்கு 64 வயது ஆகிறது. இவர் மனித உரிமைகள் கமி‌ஷனின் முன்னாள் வக்கீல் ஆவார்.

தேர்தலில் வென்றுள்ள மூன் ஜயே-இன் தென்கொரியாவின் 19-வது அதிபராவார். வடகொரியா ஆதரவாளரான இவர் சரியான சூழ்நிலை அமையும் போது அங்கு செல்ல விரும்புவதாக கூறினார்.

புதிய அதிபராகும் மூன் ஜயே- இன்னுக்கு தென் கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி துறை மந்திரி சீன் ஸ்பைசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தென்கொரியா புதிய அதிபராக பொறுப்பு ஏற்க இருக்கும் மூன் ஜயே-இன்னுடன் பணி புரிய அமெரிக்கா விரும்புகிறது. மேலும் தென் கொரியாவுடன் ஆன நட்பு தொடர்ந்து வலுப்படும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் கிழக்கு ஆசியாவில் ஜப்பானும், தென் கொரியாவும் பொதுவான பிரச்சினையை (வட கொரியா மிரட்டல்) எதிர் கொண்டுள்ளது. எனவே இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி கொரிய தீபகற்பத்தில் அமைதியும், வளமும் பெருக பாடுபடுவோம்என கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply