பருவப் பெயர்ச்சி மழை, பாம்புக்கடியால் அவதியுறும் வன்னி மக்கள்

வன்னியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பாம்புக்கடியால் இடம்பெயர்ந்து தற்காலிக கூடாரங்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திறந்த வெளிகளில் தங்கியிருக்கும் மக்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்; சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 194 பேர் பாம்புக் கடிக்கு உள்ளாகி தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், இவர்களில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவருவதுடன், 84 பேர் நோய் வாய்ப்பட்டிருப்பதுடன், 16 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெயர்ந்தவர்களில் 218,504 பேர் தற்காலிக கூடாரங்கள், பொது இடங்கள், வைத்தியசாலைகள், வணக்கஸ்தலங்கள் போன்றவற்றில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் அதில்; கூறப்பட்டுள்ளது.
 
வன்னிப் பிராந்தியத்தில் குறைந்தது 160 பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இடம்பெயர்ந்த பாடசாலைகள் சில மர நிழல்களின் கீழ் இயங்கி வருவதாகவும் தெரியவருகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 30 பாடசாலைகளும், வவுனியா வடக்கில் 10 பாடசாலைகளும் மூடப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஒட்சிசன் உட்பட மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், வன்னிக்கான மருந்துப் பொருள்களை ஏற்றிய லொறிகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறும் நோக்கில் வவுனியாவில் தரித்து நிற்பதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்; சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply