பாகிஸ்தானில் 4 தலீபான் பயங்கரவாதிகளுக்கு தூக்கு
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் மீதான வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதற்காக அரசியல் சாசனத்தை திருத்தி, ராணுவ கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி நடந்த பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட இந்த ராணுவ கோர்ட்டுகள் இதுவரை 160–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
மசூதியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி அப்பாவி மக்களையும், பாதுகாப்பு படையினரையும் கொன்று குவித்த குற்றச்சாட்டுக்கு ஆளான தலீபான் இயக்க பயங்கரவாதிகள் காய்சர் கான், முகமது உமர், காரி ஜூபைர் முகமது, அஜீஸ் கான் ஆகிய 4 பேர் மீதான வழக்குகளை அந்த ராணுவ கோர்ட்டுகள் விசாரித்தன. விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதிய ராணுவ கோர்ட்டுகள், அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தன.
இதை ராணுவ தளபதியும் உறுதி செய்தார். இதையடுத்து அந்த 4 பேரும் நேற்று ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் எந்தெந்த சிறைகளில் தூக்கில் போடப்பட்டனர் என்ற தகவலை ராணுவம் வெளியிடவில்லை. பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் இதுவரையில் மொத்தம் 441 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளதாக ‘ஜஸ்டிஸ் புராஜக்ட் பாகிஸ்தான்’ என்ற மனித உரிமை அமைப்பு கூறி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply