தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு லண்டனில் சொகுசு வாழ்க்கை:அமைச்சர் ஹேமகுமார

அப்பாவி தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது பிள்ளைகளுக்கு லண்டனில் சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்று அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம், நாட்டைக் கட்டியெழுப்புதல், வரி திருத்தச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணை, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, தமது இனத்தையே கொன்று உண்டு வாழுபவர் தான் பிரபாகரன். அப்பாவி தமிழ் மக்களையே துன்பப்படுத்தி மகிழுகின்ற பிரபாகரன் அவரது மகனையும், மகளையும் லண்டனிலுள்ள சொகுசு பாடசாலைகளில் படிக்க வைத்துள்ளார். ஆனால் அவர் உருவாக்கிய படைகளுக்கு அப்பாவி தமிழ் பிள்ளைகள் பலவந்தமாக சேர்க்கப்பட்டனர். அப்பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கின்றனர்.

புலிகளின் பிடியிலுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவென எமது பாதுகாப்பு படையினர் புலிகள் அமைந்திருந்த அணையை உடைத்தனர். மக்கள் வெள்ளம் போல வந்தனர். அந்த அப்பாவி மக்களைக் கூட புலி தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து கொன்று குவித்தனர், காயப்படுத்தினர்.

இவ்வாறு குரூரமான பயங்கரவாதிகளுக்குத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், எம்.பி. என். ஸ்ரீகாந்தா போன்றோரும் ஆதரவு நல்குகின்றனர். எம்.பி என். ஸ்ரீகாந்தா புலிகளின் உளவாளியாவார். இவர் 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மறைந்த காமினி திஸாநாயக்கவின் அல்பிரட் ஹவுஸ் இல்லத்திற்கு வந்து போனார். அதன் பின்னரே மறைந்த காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ஸ்ரீகாந்தா புலிகளிடம் சென்றிருந்தார்.

அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே

ஜனாதிபதி இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது எட்டு மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை நான் முன்னர் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியே மேற்கொண்டிருந்தது.

நானும் ஐக்கிய தேசியக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன்தான். நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன். இன்று புலிகள் மூன்று சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள்.இலங்கை வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த முறைதான் கிழக்கு மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினர் தலைகால் புரியாமல் செயற்படுகிறார்கள். எதனைச் செய்வதற்கும் நமக்கு நாடு ஒன்று வேண்டும். நாடு இருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும். ஐ. தே. கவினர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாவிலாறு அணையை மூடியதன் சாபத்தைத்தான் இன்று பிரபாகரன் அநுபவிக்கின்றார். அந்தப் பாவத்தால்தான் இன்று அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.’

ரவூப் ஹக்கீம் எம்.பீ

வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. வடக்கில் கட்டம் கட்டமாகத் தேர்தலை நடத்த அரசாங்கம் எண்ணுகிறது. இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். ஆனால் அதற்கு முன்னதாக, தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பங்கெடுக்கக் கூடியவாறான ஜனநாயக சூழலையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோன்று வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது அகதி முகாம்களில் வாழ்வோர் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இந்த உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் விவாதித்து நிறைவேற்றும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இது சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, சிவிலியன்களை விடுவிப்பதற்கு புலிகள் இயக்கத்திற்கு அரசாங்கம் 24 மணித்தியாலத்தை வழங்கியிருக்கின்றது. அதுபோல்இந்தச் சட்டமூலத்தை வாபஸ்பெறுவதற்கு நான் அரசாங்கத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குகின்றேன்.மேலும், முஸ்லிம் பிரதேசங்களை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. புல்மோட்டை ஜின்னா நகர் பகுதிகளில் முஸ்லிம் பெயர் கொண்ட கிராமங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இது மேலும் நிலைமையைச் சிக்கலாக்கும். தயவு செய்து இதனைச் செய்யாதீர்கள்.

வினோ நோகாதரலிங்கம்

த. தே. கூ. எம்.பி

வன்னியில் மக்கள் பெரும் மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இந்த நிலையில் வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட பகுதியில் ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கோ அல்லது மக்கள் வாக்களிப்பதற்கோ பொருத்தமான சூழல் இல்லை.வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் கணக்கின்படி பார்த்தால் இனி அங்கு பொதுமக்கள் இல்லை என்ற கருத்தைத் தோற்றுவித்துள்ளது.

அப்படியானால் எஞ்சியிருக்கின்ற மக்கள் யார்? அவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? இதற்கு அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும். பொதுமக்களை இழந்துதான் ஒரு சமாதானம் கிடைக்குமென்றால் அவ்வாறான ஒரு முடிவு எமக்குத் தேவையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள சகோதரர்களுடன் சந்தோசமாக வாழ நாம் தயாராக இருக்கின்றோம். எமக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

அமைச்சர் ரீ. பி. ஏக்கநாயக்க

புத்தாண்டு தினத்தன்று ஜனாதிபதி தமது சொந்த ஊருக்குச் செல்கின்றார். ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் பெந்தோட்டை பீச் ஹோட்டலுக்குச் செல்கிறார். பாற்சோறுக்கும் சோஸேஸ¤க்கும் உள்ள வித்தியாசம்தான் இது. இந்த வித்தியாசத்தை மக்கள் இன்று புரிந்துகொண்டுள்ளார்கள். அதனால்தான் இந்த மாற்றமும் ஏற்பட்டுள்ளது.யுத்தத்தை ஆரம்பித்த 24 மணித்தியாலத்திற்குள் வீதி அபிவிருத்தியை ஆரம்பித்த அரசாங்கம் எதுவும் கிடையாது. கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் படகுப் பாதைகளுக்குப் பதிலாக பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஏராளமான மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன என்று தெரிவித்த அமைச்சர் வீதி அபிவிருத்திகள் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டார்.விரைவில் ஏ௯ பாதையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்படும். அப்போது இரு மொழிகளிலும் வட பகுதி ஊர்களின் பெயர்களை மீண்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் மே மாதம் 5ம் திகதி மீண்டும் கூடும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply