இரு தினங்களில் 63000க்கும் அதிக சிவிலியன்கள் படையினரால் மீட்பு

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.நேற்றைய தினமும் பெருந்தொகையான பொது மக்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தந்ததாக தெரிவித்த அவர் கடந்த இரு தினங்களுக்குள் 62,609ற்கும் அதிகமான பொது மக்களை படையினர் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொது மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை தற்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

புதுமாத்தளன் பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் புதுமாத்தளன் வைத்தியசாலையையும் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். பொது மக்களுக்காக பாதுகாப்பு வலயத்தில் அமைக் கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலையை புலிகளே பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதிக்குள் பிரவேசித்து முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் புதுமாத்தளன் மேற்கு பிரதேசத்திலிருந்து கிழக்கு பிரதேசம் வரையிலான கரையோரத்தையும் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் இராணுவத்தினர் புலிகளின் கவச வாகனம் ஒன்றையும் தாக்கியழித்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச் செல்லும் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த புலிகளால் அனுப்பி வைக்கப் பட்டிருந்த நால்வர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், புலிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடும் இடம் ஒன்றை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயத்திலுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ஆரம்பித்தனர்.

புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ மீற்றர் நீளமான மண் அணையை படையினர் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களை படையினர் மீட்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி சாரைசாரையாக மக்கள் வர ஆரம்பித்தனர்.

இதனையடுத்து, திங்கட்கிழமை மாத்திரம் 39,081 பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். இவர்களில் 36,914 பேரை இராணுவத்தினரும், 2,167 பேரை கடற்படையினரும் மீட்டெடுத்தனர் என்றும் தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து தப்பி செல்லும் பொது மக்களை தடுக்கும் வகையில் புலிகள் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply