விசாரணை முடியும் வரை எம்.பி பதவியில் நீடிக்க கீதாவுக்கு அனுமதி
வழக்கு விசாரணை நிறைவடையும் வரை கீதா குமாரசிங்கவின் எம்.பி பதவியை ரத்து செய்யும் இடைக்கால தடையுத்தரவை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவரென மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது.இதன் போதே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிடவோ பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கவோ முடியாது.
இந்நிலையில், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கீதா குமாரசிங்கவுக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் குடியுரிமை இருப்பதாக கூறி காலி மாவட்ட வாக்காளர்கள் சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இரட்டைக் குடியுரிமை இருப்பதால் கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாதென தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக, கீதா குமாரசிங்க, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் நேற்று வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.
இதன்போது, தமது கட்சிக்காரர் சுவிட்ஸர்லாந்துப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்துள்ளமையால், அவருக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கப் பெற்றதாகவும், அது கேட்டுப் பெறப்பட்ட ஒன்றல்ல எனவும் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாதிட்டார்.
மேலும், பாராளுமன்ற உள்ளக விவகாரங்களில் குறுக்கிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், எந்த வகையில் கிடைக்கப் பெற்றாலும் இன்னமும் அவர் இரட்டைக் குடியுரிமையுடனேயே உள்ளார் என அரச தரப்பு சட்டத்தரணி பிரதி சொலிஸிடர் ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதன்படி, 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய கீதாவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.இந்த மனுவை விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்யுமாறு அவர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதன் பிரகாரம் செப்டம்பர் 25 மற்றும் ஒக்டோபர் 04 ,13 ஆகிய திகதிகளில் வழக்கு விசாரணை நடத்தப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply