3 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி உரிமையை உணர்த்துங்கள் : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நாளில் (18) அனைத்து வடகிழக்கு தமிழ் மக்களும் 3 நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் நாளாக இம்மாதம் (18) அனுஸ்டிக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் நினைவுகூரப்படுகிறது
இறுதி யுத்தத்தின் முடிவில் 2009ம் ஆண்டு மே மாதம் (18)உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை.
நடந்தவை பற்றிய நம்பகத்தன்மையான விசாரணைப் பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை.எனினும்
மக்கள் உண்மையை அறிய இன்று வரை ஆவலாக உள்ளார்கள்.
அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீடிப்பு வழங்கியுள்ளது. பொறுப்புக் கூறலானது வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு.
இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டது. ஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தெரியவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மட்டும் வெளிநாட்டு நீதிபதிகளுடன் உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது.
சிலர் இவ்வாறான பொறிமுறையை வேண்டி நிற்பதன் நோக்கம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என்று சிலர் நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்றும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள். இது தவறு. வெளிப்பயைான விசாரணைகளே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க உதவும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பதை இவ்வாறான விசாரணைகளே வெளிச்சத்துக்கு கொண்டுவரும்.
அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவை தமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும் என்றும் . வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply