சிலாபத்தில் சிக்கிய 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்! பல திடுக்கிடும் தகவல்கள்…
பாகிஸ்தானிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடந்த வியாழனன்று புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட உளவுப் பிரிவினர் கைப்பற்றிய நிலையில், அதன் பின்னணியில் உள்ளதாக நம்பப்படும் பாயிஸ் பாய் குறித்து பல தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானியரான குறித்த நபர் டுபாயில் தங்கியிருந்து இந் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன்நாட்டுக்குள் அவரது போதைப்பொருளை விற்பனை செய்யும் முன்னணி வர்த்தகர்கள் பலர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட தெஹிவளையைச் சேர்ந்த வாகன உதிரிப்பாக வர்த்தகரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ததில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. பாயிஸ் பாயை குறித்த வர்த்தகர் வாகன உதிரிப்பாக விவகாரம் தொடர்பில் வெளிநாடு செல்வதாக தெரிவித்து பல தடைவை சந்தித்துள்ளமையும் டுபாயிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பாய் போதைப்பொருள் முகவர்களை சந்தித்துள்ளமை தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து கடல்மார்க்கமாக ஹெரோயின் போதைப்பொருளினை நாட்டுக்குள் கடத்தும் சம்பவம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவுக்கு தகவல் கிடைத்திருந்தது. அதன்படி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழுள்ள உளவுப் பிரிவு ஊடாக இந்த தகவல் சேகரிக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் வட மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்த்தனவின் நேரடிக் கண்காணிப்பில் புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவின் கீழ் உளவுத் துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுனில் ஜயலதில தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 11 ஆம் திகதி அதிகாலை இப் போதைப் பொருளானது, பாகிஸ்தானிலிருந்து கப்பல் ஒன்றூடாக கொண்டுவரப்பட்டு நடுக்கடலில் வைத்து சிறிய மீன்பிடி படகொன்றுக்கு மாற்றப்பட்டு குறித்த தீவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து கடந்த 10 ஆம் திகதி இரவு கொழும் பிலிருந்து சிலாபத்துக்கு டிபண்டரில் வந்துள்ள சந்தேகநபர் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து அதிகாலை குறித்த தீவுப் பகுதிக்கு சென்று ஹெரோயினை கையேற்று டிபண்டரில் கொழும்பு நோக்கி பயணிக்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார். அவரே தற்போது தடுப்பில் உள்ள உதிரிப்பாக வர்த்தகராவார்.
இந் நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் பாயிஸ் பாய் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளதாக நம்பப்படும் மதூஷ் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply