ஓராண்டில் அ.தி.மு.க. இரண்டானது; 3 முதல்வர்கள் மாறி உள்ளனர்: தமிழிசை

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அ.தி.மு.க. அரசு சாதனை என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை. ஓராண்டுக்குள் கட்சி 2 ஆக உடைந்துள்ளது. 3 முதல்வர்கள் மாறி உள்ளனர். 3 அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. சின்னத்தை தொலைத்து உள்ளனர்.

இடைத்தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கொடுத்து தேர்தல் ரத்தாகி உள்ளது. ஊழல் வழக்கில் 2 பொதுச்செயலாளர்களும் சிறையில் உள்ளனர்.

தமிழக அமைச்சர்கள் பலர் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதுதான் நடந்த நிகழ்வுகளாக இருக்கிறது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் இந்த ஓராண்டு அ.தி.மு.க. அரசில் இல்லை. இனிமேலாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

மத்திய பா.ஜனதா அரசு 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் தங்கள் சாதனைகளை வெளியிட்டுள்ளனர். அதே போல் எடப்பாடி அரசு அமைச்சர்களும் தாங்கள் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும்.
இந்த ஆட்சியில் டாஸ்மாக் ஊழல், மணல் குவாரி ஊழல் என இன்னும் ஊழல் முற்றிலுமாக ஒழியவில்லை.

காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், கூட்டணிக்கு ஆள் வராத கட்சி பா.ஜனதா. அதனால்தான் ரஜினியை கூப்பிடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். முதலில் திருநாவுக்கரசர் அவரது கட்சியை பார்க்க வேண்டும்.

பா.ஜனதாவுக்கு ரஜினி வந்தால் கூடுதல் பலம். பா.ஜனதாவுக்கு ரஜினி மட்டுமே பலமல்ல.

ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் ரஜினியை பா.ஜனதாவில் சேரக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு ஏன் இந்த பதட்டம்?

தேசிய தலைவர் அமித் ஷா, ரஜினிக்கு பா.ஜனதா கதவு திறந்து இருக்கிறது என்று கூறியிருப்பதற்கு ரஜினி எந்தவொரு பதிலும் கூறவில்லை என்று சொல்கிறார்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் பலத்தை கூட்டுகிறோம்.

பிரதமர் மோடி ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்குகிறார். தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமரும், ஓ.பன்னீர்செல்வமும் என்ன பேசினார்கள் என்று கூறியுள்ளார்.

யூகங்கள் அடிப்படையில் பேசுகிறார்கள். பிரதமருக்கு யாரை, எதற்கு என்ன காரணத்திற்காக பார்க்க வேண்டும் என்று தெரியும்.

இந்துக்கள் திருடர்கள் என்று சொன்ன தி.மு.க. இன்று கோவில் குளத்தில் தூர் வாருகிறது, இறைவா என்று எனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்து உள்ளேன். இது எனது சொந்த கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply