தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ‘ஜாமீன்’

சென்னை ராணிசீதை மகாலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச விரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் 13-வது குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 4-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது இந்த வழக்கில் தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார்.

அவரை சொந்த ஜாமீனில் செல்லும்படி கோர்ட்டு கேட்டுக் கொண்டதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தேச துரோக வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு தான் உள்ளது என்பதால், இந்த வழக்கு கடந்த மாதம் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போதும் அவர் ஜாமீனில் வெளியில் செல்ல விரும்பவில்லை.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்ககோரி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் வைகோ திடீரென மனு தாக்கல் செய்தார். இந்த மனு 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி புருஷோத்தமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘வைகோவுக்கு ஜாமீன் வழங்க ஆரம்பத்தில் இருந்தே போலீசார் எதிர்க்கவில்லை. மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரான அவர், சொந்த ஜாமீனில் செல்லும்படி கோர்ட்டு கூறியும் ஏற்கவில்லை. அவரே போலீஸ் வாகனத்தில் ஏறி சிறைக்கு சென்றுவிட்டார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை’ என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி புருஷோத்தமன், ‘எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல், வைகோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply