புலிகளோடு பேச்சு நடத்த வேண்டிய எந்த அவசியமும் அரசுக்கு கிடையாது:ஜனாதிபதி

புலிகளோடு பேச்சு நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது. மாறாக பயங்கர வாதிகளிடமிருந்து தப்பி வந்துள்ள மக்களின் வாழ்க் கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளே அவசியமாகிறது. என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெரிவித்தார்.தொடர்ந்தும் சர்வதேச அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அரசாங்கம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டியது சகலரதும் கடமையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியா – பிழையா என்பதை சர்வதேசத்துக்கும் உணர்த்துவதாக மேல் மாகாண சபைத் தேர்தல் அமைவதால் தாய்நாட்டின் எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுப்பது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த நிகழ் வொன்று நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற் றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

வன்னி மனிதாபிமான நடவடிக்கை மூலம் பாதுகாப்பு வலயம் ஐந்து கிலோ மீற்றர் சதுர கிலோ மீற்றராக மாறியுள்ளது. கடந்த மூன்று தினங்களிலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளனர்.

அம்மக்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு இராணுவத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கிடையிலான வித்தியாசத்தை தப்பிவந்த மக்கள் மட்டுமன்றி தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்ற புலிகளின் தலைவர்களும் உணர்ந்துள் ளனர்.

தமது உணவுப் பொட்டலங்களையும் அப்பாவிப் பொது மக்களுக்குப் பகிர்ந்தளித்து அம்மக்களைப் பராமரிக்கும் படையினருக்கு நாட்டு மக்கள் அனைவரினதும் பாராட்டுக்கள் உரித்தாகின்றன.

புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை. மாறாக பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிவந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் பேச்சுவார்த்தையே அவசியமாகிறது.

இங்கிலாந்து பிரதமர், அவுஸ்திரேலியப் பிரதமர் மற் றும் ஐக்கிய நாடுகள் சபை விசேட பிரதிநிதிகளும் தொலைபேசி மூலம் என்னோடு தொடர்புகொண்டு பேசினர். அவர்களுடனும் நான் இதுபற்றியே கலந்துரையாடினேன்.

எமக்கு பாரிய அழுத்தங்கள் வருகின்றன. யுத்தத்தை நிறுத்தச் சொல்கின்றார்கள். எமக்கு நிதியுதவி வழங்க முடியாது என அழுத்தம் கொடுக்கின்றார்கள். எத்தகைய அழுத்தம், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் நாம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை.

பிரபாகரனின் நடவடிக்கைக்கு முடிவுகட்ட இன்னும் அதிக நாட்களில்லை. படையினர் அதற்கான போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

நாம் யுத்தத்திற்காக பாரிய செலவு செய்துள்ளோம். எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தவில்லை. கடந்த மூன்று வருட காலங்களில் 35,000 புதிய ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு அபிவிருத்திக்கென ஒரு பில்லியன் அமெரிக்கன் டொலரைச் செலவிட்டுள்ளோம். நாடெங்கிலும் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டதாகவே எமது செயற்றிட்டங்கள் அமைகின்றன எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply