இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ கொடையாளிகளிடம் ஐ.நா கோரிக்கை
இலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மோதல்களற்ற பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு நாட்களாக வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்தடைந்தடைந்திருக்கும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சிவிலியன்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்ற அவசியமான நிதியுதவியை வழங்கும்படி சர்வதேச கொடையாளிகளை ஐக்கிய நாடுகள் சபை கோரியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கைக்கான பிரதிநிதி நீல் பூன், வியாழனன்று வவுனியா சென்று அங்கு வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பார்வையிட்ட பின்னர் இந்தக்கோரிக்கையை கொழும்பில் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்தடைந்திருக்கும் சுமார் 80,000ற்கும் அதிகமான சிவிலியன்களை தான் கண்ணுற்றதாகவும், அங்கு பல சிறுவர்களும் பெண்களும் நோய்வாய்ப்பட்டவர்களாக, போசாக்கின்றி காணப்படுவதாகவும், ஆண்கள் உடல்காயங்களுடன் கிழிந்த ஆடைகளுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இவர்களது அடிப்படைத் தேவைகளான உணவு, உறையுள், உடை, குடிநீர், சுகாதார மற்றும் வசதிகளை வழங்குவதற்கு நிதி தேவைப்படுவதாகவும், இங்குள்ள சிறுவர்களிற்கான பாடசாலைக் கல்வி வசதியினைச் செய்து கொடுத்து அவர்கள் மத்தியில் சுமூகமான மனநிலையொன்றினைத் தோற்றுவிப்பது மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிக்கு மனிதநேய குழு ஒன்றை தாம் அனுப்புவதாக இன்று அறிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply