லண்டன் அடுக்குமாடி தீவிபத்தில் 12 பேர் பலி உயிரை காப்பாற்ற 10–வது மாடியில் இருந்து குழந்தையை வீசிய தாய்

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் 12 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரை காப்பாற்ற தனது குழந்தையை 10–வது மாடியில் இருந்து ஒரு பெண் வீசினார். அந்த குழந்தையை கீழே நின்று இருந்தவர் லாவகமாக பிடித்ததால் தப்பியது. லண்டன் நகரில் 27 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

ஒவ்வொரு ஜன்னலிலும் குழந்தைகள் உள்பட பலரும் ‘உதவி, உதவி’ என கைகளை அசைத்து கூச்சல் போட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார்கள்.

விபத்தை நேரில் பார்த்த சமிரா லம்ரானி என்ற பெண் கூறியதாவது:–

தீ விபத்து ஏற்பட்டதும் அந்த கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து மக்கள் மரண பயத்துடன் உதவி கேட்டு அலறுவதை பார்த்தேன். அப்போது 9 அல்லது 10–வது மாடியில் உள்ள ஒரு ஜன்னல் பாதி திறந்தது. அதில் ஒரு பெண், என் குழந்தையை கீழே வீசுகிறேன். யாராவது பிடித்துக்கொள்ளுங்கள் என்று கூறியபடியே தனது குழந்தையை தூக்கி வீசினார்.

அதிர்ஷ்டவசமாக கீழே நின்று இருந்த ஒருவர் அந்த குழந்தையை லாவகமாக பிடித்துக் கொண்டார். இதனால் அந்த குழந்தை உயிர் தப்பியது. இவ்வாறு சமிரா கூறினார்.

 

மற்றொரு பெண் சாரா கூறும்போது, ‘‘ஒரு பெண் 5 அல்லது 6–வது மாடியில் இருந்து தனது 5 வயது மகனை கீழே தூக்கி வீசினார். அநேகமாக சில எலும்பு முறிவுகளோடு அந்த சிறுவன் தப்பியிருப்பான் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

குடியிருப்பில் இருந்த சிலர் துணிகளை பாராசூட் போல பயன்படுத்தி அதன் மூலம் ஜன்னல் வழியாக குதித்தனர். மேலும் சிலர் படுக்கை விரிப்புகளை கயிறுபோல ஒன்றாக கட்டி இறங்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் கீழே இறங்கி தப்பினார்களா? என்பது தெரியவில்லை என்றும் நேரில் பார்த்த சிலர் கூறினார்கள்.

 

21–வது மாடியில் இருந்த ஒரு பெண் தனது 6 குழந்தைகளுடன் உயிர்பிழைக்க கீழே இறங்கினார். ஆனால் அவர் தரைதளத்துக்கு வந்தபோது 4 குழந்தைகள் மட்டுமே இருந்தன. மற்ற குழந்தைகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்து காணப்பட்டார் என்று மைக்கேல் பரமசிவன் என்பவர் தெரிவித்தார்.

இதுபோல விபத்தை நேரில் பார்த்த பலரும் பலவித துயர சம்பவங்களை தெரிவித்தனர்.

 

இந்த தீவிபத்தில் குறைந்தபட்சம் 12 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 50–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். 27 மாடிகளில் 24–வது மாடிக்கு மேலே உள்ள 3 அடுக்குகளில் வசித்தவர்கள் தப்பித்ததாக தெரியவில்லை. எனவே பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply