வடக்கு மாகாணத்தின் முதல்–மந்திரியாக விக்னேஷ்வரன் நீடிப்பார்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் முதல்–மந்திரியாக பதவி வகிப்பவர் சி.வி.விக்னேஷ்வரன். இவர் அண்மையில் தனது மந்திரிசபையில் இருந்து விவசாய மந்திரி ஐயங்கரநேசன், கல்வி மந்திரி குருகுல ராஜா ஆகியோரை நீக்கம் செய்தார். இவர்கள் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படியும் உத்தரவிட்டார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, வடக்கு மாகாணத்தில் உள்ள 38 கவுன்சிலர்களில் 22 பேர் விக்னேஷ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தனர். மேலும், இது தொடர்பான தீர்மானத்தில் 22 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு மாகாண கவர்னர் ரெஜினால்டு கூரேயிடம் அண்மையில் அளித்தனர்.
இந்த நிலையில் வடக்கு மாகாண கவுன்சிலரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கட்சிக்குள் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் முதல்–மந்திரி பதவியில் இருந்து விக்னேஷ்வரன் நீக்கப்படமாட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள 4 கட்சிகளும், முதல்–மந்திரியை உறுதியாக ஆதரிக்கின்றன’’ என்றார்.
முதல்–மந்திரி பதவியில் இருந்து விக்னேஷ்வரன் நீக்கப்படாமலேயே, இப்பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காணப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply