கோமாவில் இருந்த மாணவன் மரணம்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம்
அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், வாம்பியரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்த வாம்பியர் நேற்று மரணமடைந்தார். வாம்பியர் கோமா நிலைக்கு சென்றதற்கு வடகொரிய அரசின் கொடூர சித்ரவதைகள் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாம்பியரின் மரணத்தையடுத்து, வடகொரியா அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டிரம்ப், வடகொரியாவில் நடைபெறுவது காட்டுமிராண்டித்தனமான ஆட்சி. மிக துயரகரமான இந்த சம்பவத்தில் குறைந்தபட்சம் ஒட்டோ வார்ம்பியரை நமது நாட்டுக்கு கொண்டு வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்தின் ஆட்சியையும் தனிமனித ஒழுக்கம் மற்றும் நாகரிகத்தையும் கடைப்பிடிக்காத ஆட்சியாளர்களின் கையில் சிக்கும் அப்பாவி மக்கள் சந்திக்கும் இதுபோன்ற துயரகரமான நிகழ்வுகளை தடுக்கவேண்டும் என்னும் எனது தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தின் கொள்கைக்கு வலிமை சேர்க்கும் விதமாக ஓட்டோவுக்கு நேர்ந்த அவலமுடிவு அமைந்துள்ளது.
வடகொரியாவின் காட்டுமிராண்டித்தனத்துக்கு சமீபத்தில் இரையான ஒட்டோ வார்ம்பியரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில் இதற்கு காரணமான வடகொரியாவுக்கு அமெரிக்க அரசு தனது கண்டனத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply