போர்நிறுத்தத்தால் கிழக்கு மாகாணம் குழம்பிவிடும்: முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்
இந்தியாவின் அழுத்தத்துக்கு இணங்க போர்நிறுத்தமொன்று கொண்டுவரப்பட்டால் அது கிழக்கு மாகாணத்தின் இயல்பு நிலையைப் பாதித்துவிடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.
“கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசியல்வாதிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படாததால், கிழக்கின் இயல்பு நிலை குறித்து இந்தியத் தலைவரகள் போதியளவு அறிந்துகொள்ளவில்லை. கிழக்கில் ஏற்படும் மாற்றங்கள் சரியான முறையில் வெளிக்கொணரப்படுவதில்லை. இதன் பின்னணியிலேயே இலங்கையில் போர்நிறுத்தமொன்றை அமுல்படுத்தவேண்டுமென இந்தியா வலியுறுத்தி வருகிறது” என சிவசேத்துரை தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கை வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், இந்தியப் பிரதமர், முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கவில்லை.
எனினும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு உட்பட்டு போர்நிறுத்தமொன்று நடைமுறைப்படுத்தப்படுமாயின் தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சுமூகநிலை மாறி, பழைய நிலைக்கு கிழக்கு மாகாணம் சென்றுவிடும் என கல்முனையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடபகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களை நிறுத்துவதற்கு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவேண்டுமென தமிழக கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான முயற்சிகளில் இந்திய மத்திய அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்கத் தயாரென தமிழகக் கட்சிகள் முன்னர் அறிவித்திருந்தன.
எனினும், இலங்கை ஜனாதிபதியின் விசேட பிரதிநதியாக பசில் ராஜபக்ஷ புதுடில்லி சென்று திரும்பியதும், இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடு பற்றி தமிழக ஆளும் கட்சி எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாறாக வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை அனுப்பிவைக்க தமிழக மற்றும் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply