ஒரே இடத்தில் 3 லட்சம் பேர் யோகாசனம்: புதிய கின்னஸ் சாதனை

சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் இன்று ஒரே இடத்தில் மூன்று லட்சம் பேர் இணைந்து யோகாசனத்தில் ஈடுபட்ட நிகழ்வு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் உள்ள பெருந்திடலில் நடைபெற்ற இந்த மாபெரும் யோகாசன நிகழ்ச்சியை யோகாசன கலை குரு பாபா ராம்தேவ் தலைமையேற்று நடத்தினார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ருபானி, துணை முதல் மந்திரி நிதின் பட்டேல், முன்னாள் முதல் மந்திரி ஆனந்திபென் பட்டேல் மற்றும் ஏராளமான பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள், ஐகோர்ட் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரபல தொழிலதிபர்கள் சராசரி பொதுமக்கள் உள்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பாபா ராம்தேவ் கற்றுத்தந்த சுவாசப் பயிற்சிகளை செய்தவாறு சுமார் ஒன்றரை மணிநேரம் அவர்கள் யோகாசன நிலையில் ஆழ்ந்தனர். இன்று ஒரே இடத்தில் சுமார் 3 லட்சம் மக்கள் ஒன்றாக அமர்ந்து யோகாசனம் செய்த நிகழ்வு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது என பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

 

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற முதலாம் சர்வதேச யோகா தினத்தன்று டெல்லி ராஜபாதையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 ஆயிரத்து 985 பேர் ஒரே இடத்தில் யோகாசனம் செய்த நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

அந்த சாதனையை அகமதாபாத் நகரில் நடைபெற்ற இன்றைய யோகாசன நிகழ்ச்சி முறியடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply