விடுதலைப் புலிகளின் இரட்டைவேடம் எமக்குத் தெரியும்: கெஹலிய ரம்புக்வெல
போர்நிறுத்தத்துக்குத் தயார் என்ற விடுதலைப் புலிகளின் அறிவிப்பை நிராகரித்திருக்கும் இலங்கை அரசாங்கம், புலிகளின் இரட்டை வேடம் பற்றி மக்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளது.
“விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டாலே எந்தவொரு போர்நிறுத்தமும் சாத்தியப்படும்” என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கத் தயார் எனவும், ஆயினும், இலங்கை அரசாங்கம் விதித்திருக்கும் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டுமென்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்ளமுடியாது என விடுதலைப் புலிகள் நேற்றுத் தெரிவித்திருந்தனர்.
“நாம் எப்பொழுதும் போர்நிறுத்தம் தேவையென்றே கூறிவருகிறோம். இதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறினார்.
விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் என்ற பேரில் வன்முறைகளில் ஈடுபட்ட அனுபவங்கள் கடந்த காலத்தில் நிறையவே இருந்ததால் கிழக்கு மக்களை மீட்டதைப் போன்று வடக்கு மக்களையும் மீட்பதற்கு மனிதநேய நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
“எமது மனிதநேய நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்க முன்னர், விடுதலைப் புலிகள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொல்ல முயற்சி செய்துததுடன், பல இராணுவ அதிகாரிகளைக் கொலை செய்துள்ளனர்” என்றார் கெஹலிய ரம்புக்வெல.
“வன்முறைகள் இடம்பெறாத நிலையையே போர்நிறுத்தம் என்று அழைப்போம்” என அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 30 வருட காலத்தில் விடுதலைப் புலிகளின் பல்வேறு போர்நிறுத்தங்கள் மூலம் போதுமானளவு பாடங்களைக் கற்றிருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சதிக்குள் சிக்காமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செயற்படுமெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply