யுத்த மீறலும் யுத்த நிறுத்தமும்
இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் இதே நாள் (ஏப். 26, 1986) புலிகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் ஆன்ம சக்தியாக இருந்த பன்முகப் தன்மைக்கு முதல் வேட்டு வைத்தார். புலிகளின் உள்ளார்ந்த இராணுவ மேலாதிக்க வெறியின் வெளிப்படையான அரசியலே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மீது புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் நடவடிக்கையாகும். 1986 ஏப்ரல் 26 இல் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவக் `குண்டாஸ்` தலைவரான கிட்டு என்றழைக்கப்பட்ட சதாசிவம் கிருஸ்ணகுமார் தலைமையில் தொடங்கப்பட்ட `ரெலோ` அழித்தொழிப்பு மே 6இல் எமது அமைப்பின் தலைவர் சிறீ சபாரட்னம் கொலையுடன் மிக வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததாக புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் புல்லரித்துக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் கிட்டு மேற்கொண்ட மகத்தான `மக்கள் பணி`க்கு கொக்கோ கோலா கொடுத்து கெளரவித்தார்கள்.
23 வருடங்களுக்கு முன் புலிகள் செய்யத் தொடங்கிய `பழியும் பாவமும்` தான் இன்று இவ்வாறான ஒரு யுத்த நிறுத்தம் கோரும் அறிக்கையை வெளியிட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் திசை தெரியாது வந்து நிற்கின்றனர். ‘
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
26.04.2009
ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம் அறிவிப்பு
வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தினை தடுத்து நிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஐ.நா, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண்டுதல்களை ஏற்றும் இன்று முதல் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப் படுத்துகின்றனர். இதனடிப்படையில் நாம் அனைத்து வலிந்துதாக்குதல் நடவடிக்கைகளையும் காலவரையறையற்ற முறையில் இடைநிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்.
சிறீலங்கா அரசு படைகள் வன்னியில் தொடர்ந்து நடத்திவரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களிற்கு முரணான போர் நடவடிக்கைகளினால் எமது மக்கள் அனுபவிக்கும் துன்பம் அதியுச்ச அளவினை எட்டியுள்ளது. ஒருபுறம் முல்லைத்தீவு கரையோரங்களில் உள்ள எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளை சுற்றிவளைத்து குவிக்கப்பட்டுள்ள சிங்களப் முப்படைகளினதும் தாக்குதல்களிற்குள் அகப்பட்டுள்ள 165,000 க்கும் அதிகமான மக்கள் நாளாந்தம் எறிகணை வீச்சு, விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் பலவித போர் அச்சுறுத்தல்களிற்குள்ளாகி உயிரிழப்புக்களையும், படுகாயங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த பலமாதங்களாக திட்டமிட்ட முறையில் சிறிலங்கா அரசினால் இம்மக்களிற்கான உணவு, மருந்து மற்றும் பிற மனிதாபிமான வழங்கல்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பட்டினி அபாயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இப்பகுதிகளிலிருந்து பலவழிகளிலும் வெளியேறிய போது சிங்களப்படைகளிடம் அகப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் சர்வதேச விதிகளுக்கு முரணாக தடுப்புமுகாம்களிலும், இராணுவ வதைமுகாம்களிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்கள் சர்வதேச விதிகளுக்குட்பட்ட பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாது துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் சொந்த இடங்களிற்கு சென்று குடியமர்வதற்கு சிறிலங்கா படையினர் அனுமதிக்காமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையினால் அந்த மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். மேலும், போர்முனைகளுக்கு இவ்வாறு அகப்பட்ட மக்களின் ஒருபகுதி கொண்டு வரப்பட்டு மனிதகேடயங்களாகப் பாவிக்கும் முயற்சிகளும் சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தப் பின்னணியில், ஐநா இப்பகுதிகளுக்கு மனிதாபிமான வழங்கல் வழிகளை ஏறபடுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வரவேற்பதுடன் இம்முயற்சிகளுக்கான ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கிட தயாராகவுள்ளோம். மேலும் ஜி-8 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை, இந்திய அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பு என்பனவற்றினை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.
இன்று ஏற்பட்டுள்ள வன்னி பேரவலங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து மக்களின் இழப்புக்களை நிறுத்தி, மனிதாபிமான வழங்கல்களை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்கு போர்நிறுத்தப்பட்ட சூழல் அவசியமானது என்கின்ற சர்வதேச சமூக வேண்டுதல்கள் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதற்கான முதல் முக்கிய படியாக நாங்கள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பினை இன்று விடுக்கின்றோம். சிறீலங்கா அரசும் இத்தகையதொரு போர்நிறுத்த ஏற்பாட்டிற்கு உடன்படுமாறு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறான போர் நிறுத்த ஏற்பாடானது மனிதப் பேரவலத்தினை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன் இன்றுள்ள மனிதப் பேரவலத்தின் பின்விளைவுகள் இலங்கைத் தீவின் மக்கள் சமூகங்கள் மீதும், பிராந்தியம் மீதும் ஏற்படுத்தக் கூடிய நீண்டகால சிக்கல்களிற்கும் முடிவு தரும் வழியினைத் திறக்கும் என்று நம்புகின்றோம்.
புலிகளின் இந்த `யுத்த நிறுத்த` அறிவிப்பு இணையத்தில் வெளியாகி சில மணி நேரத்துள் இலங்கை அரசு புலிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழோசையிடம் பேசிய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த நிலையில் புலிகள் போர் நிறுத்தம் கோருவது அர்த்தமற்றது என்று கூறி அதனை நிராகரித்துள்ளார். ஆயுதங்களை களைந்து விட்டு, தாம் பணயமாக பிடித்து வைத்திருக்கும் பொது மக்களை விடுதலை செய்து விட்டு, சரணடைவது ஒன்றே புலிகளுக்கு இப்போது உள்ள ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
கோண்டாவில் விவசாயத் தோட்டம் ஒன்றில் கிட்டு தலைமையில் சுற்றி வளைக்கப்பட்ட சிறீ சபாரட்னம் `பேசிச் தீர்ப்போம்` என்று தனது கடைசி வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள் புலிகளின் துப்பாக்கி ரவைகள் அவரது இறுதி மூச்சை நிறுத்தி விட்டது.
புலிகள் இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட `மரபை மீறிய’ அதே நாளில் ஒரு ’யுத்த நிறுத்தக்’ கோரிக்கையை இன்று முன் வைக்க வேண்டிய அவல நிலைக்கு அவர்களின் ‘பாசிச’ அரசியல் பாதை போட்டுக் கொடுத்துள்ளது.
புலிகள் கோரும் தற்காலிக ‘உடனடி’ போர்த் தவிர்ப்பும் அரசு கூறும் ‘நிரந்தர’ யுத்த நிறுத்தமும் தொட்டுவிடக் கூடிய தொலைவில் தெரிவதான அரசியல் காட்சிகள் விசித்திரமானது மட்டுமல்ல வேதனையானதும் கூட. இவ்முரண் நகையான வரலாற்றை எமது சமகால அரசியல் கோசங்களான சமாதானம், ஜனநாயகம், புனர்நிர்மானம் என்பதன் ஊடாக பரந்த ஒளியில் விரிந்த பொருளில் புதிய திசை நோக்கி முன்கொண்டு செல்ல முடியுமென திடமாக நம்புகிறோம்.
அரசியல் இலக்குகள் மட்டும் உன்னதமாய் இருந்து விட்டால் போதாது, அவைகளை அடையும் போராட்ட வழி முறைகளும் மனித விழுமியங்களுக்கு ஏற்புடையதாக இருத்தல் அவசியம் என்பதையே புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் விட்டு சென்ற நிர்ணயமான வரலாற்றுத் தடமாகும்
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply