ஜீவ சமாதி அடைய உண்ணாவிரதம் ஆரம்பிப்பு
ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி முருகன், வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
துறவி ஆடைகளுடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன். சிறைத்துறை தலைவருக்கு, கடந்த மாதம் மனுவொன்றை, வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். அம்மனுவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தனது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது. சிறை வாழ்க்கையை வெறுப்பதாகவும் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 17ஆம் திகதி முதல், சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட மறுத்து, பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தார். அவர் அளித்த மனுவின் மீது, கடந்த ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், வேலூர் சிறைச்சாலையில், வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை, முருகன், நேற்று தொடங்கியுள்ளார். பழங்களை சாப்பிட மறுத்ததுடன், தண்ணீரை மட்டும் குடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜீவசமாதி அடைவது குறித்து, தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சிறையில்ஈ ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று, ஏற்கெனவே மனு அளித்திருந்தார். இதன் மீது எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
“தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்தால், ஓரிரு நாளில் அவரை சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply