`தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்`
1986ம் ஆண்டு ஏப்பிரல் 26ம் நாள் புலிகள் ரெலோ மீது ஒரு தலைப்பட்டசமாக ஆயுதத் தாக்குதலை நடத்த ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்தில் கிட்டு என்ற கிருஷ்ணகுமார் தலைமையில் இந்திய அரசாங்கத்திற்கு சார்பாக ரெலோ செயற்படுகின்றனர் என்ற குற்றச் சாட்டை முன்னிறுத்தியே தாக்குதலை ஆரம்பித்தனர். ரெலோ இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைப்படி தம்மை தாக்கி அழிக்க இருந்ததாகவும் தாம் இதனை அறிந்து முந்தி விட்டதாக பொய் பரப்புரையுடன் தாக்குதல் காரணங்களை அவிழ்த்து விட்டனர்.
உயிருடன் பல ரெலோ போராளிகள் வீதி ஓரங்களில் போட்டுக் கொழுத்தப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் கிட்டு, வன்னியில் மாத்தையா, திருகோணமலையில் சந்தோஷம், மட்டக்களப்பில் பிரான்ஸிஸ் என தலைமை ஏற்று இக் கொலைகளை தலைவர் பிரபாகரனின் வழி நடத்தலில் செய்தனர்.
பொது மக்கள் பெரும் அளவில் இச்செயற்பாட்டிற்கு தமது எதிர்புக்களை தெரிவித்து இருந்தனர். தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்து இக் கொலைகளை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த திரு எம்.ஜி.ஆர் புலிகளுடன் நல்ல உறவில் இருந்தார். அனாலும் அவரால் புலிகளின் ரெலோவிற்கு எதிரான ஆயுத நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியவில்லை. முடியவில்லை என்பதை விட முயற்சிக்க வில்லை என்பதே கசப்பான உண்மை.
ஈ.பி.ஆர்.எல்.எவ் மாத்திரம் இச் செயற்பாட்டை எதிர்த்து மக்களை வீதிகளுக்கு இறக்கி போராடினர். சகோதர யுத்தத்தை எப்போதுமே தவிர்த்து வந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மக்கள் சக்தியைத் திரட்டி ரெலோவிற்கு எதிரான புலிகலின் ஆயுதத் தாக்குதலை எதிர்த்து வந்தனரே ஒழிய புலிகளுக்கு எதிரான ஆயுதச் செயற்பாட்டை செய்யவில்லை.
புலிகளின் இவ் கொலை வெறியாட்டம் பல ரெலோ போராளிகளை கொலை செய்தும், கைது செய்து பின்பு சித்திரவதை செய்து கொலை செய்தும் என நாள் ஒரு வண்ணம் பொழுதொரு வண்ணம் என நிறைவேறிக் கொண்டிருந்தது. இன்று போலவே அன்றும் மரணத்தில் சுய இன்பம் காணும் சில புலிப் பினாமிகள் புலிகளுக்கு வீதியோரங்களில் சோடா உடைத்து வரவேற்றனர்.
இலங்கையில் அன்று ஆண்ட ஜ.தே.க அரசாங்கம் இவ் நிகழ்வால் பெரிதும் சந்தோஷம் அடைந்து தனது அறிவிக்காத போர் நிறுத்தத்தை கடைப்பிடித்தது. தான் செய்ய வேண்டிய வேலைகளை தனக்கு ஒரு செலவும் வைக்காமல் புலிகள் செய்வதில் அவர்களுக்கு ஆனந்தம். அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலக் முதலி போன்றோர் புலிகளின் செயற்பாட்டால் பெரிதும் உவகை அடைந்து அறிக்கைகள் விட்டவர்களில் முக்கியமானவர்கள்.
கிழக்கு மாகாணத்துப் போராளிகள் பலரே புலிகளால் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் பயிற்சி, இன்னபிற விடுதலை இயக்கச் செயற்பாட்டிற்காக வந்திருந்த பல ரெலோ போராளிகள் தப்பி ஓடி ஒளிக்க வழி தெரியாது நின்ற அவர்கள் தவிச்ச முயலை அடித்துக் கொன்றது போல் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம்தான் முதன் முதலில் தங்கள் பிள்ளைகளை இயக்கத்தில் சேர விடாமல் வெளி நாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டை பல பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தியது. இதற்கு முன்பு எல்லாம் தன் பிள்ளை விடுதலை அமைப்பில் இருப்பதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்ட சமூகம் தனது சிந்தனை மெதுவாக மாற்றத் தொடங்கியது.
விடுதலைப் போராட்டத்தின் இறங்கு முகத்திற்கு இன்றுதான் பிள்ளளையார் சுழி புலிகளால் போடப்பட்டது. இதன் பின்பு எல்லாம் இறங்கு முகம்தான். பாலகுமார் பிரபாகரனுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி புலிகளுடன் ஐக்கிமானார். புளொட் அநியாய உயிர் இழப்புக்களை தவிர்பதற்காக தமது இயக்க செயற்பாட்டை நிறுத்துவதாக அறிக்கை விட்டு ஒதுங்கிக் கொண்டது. எஞ்சியது ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டுமே. புலிகளும் விருப்புடன் எதிர்பார்த்ததும் இதையே?
இதே வருடம் மார்கழி மாதம் ஈ.பி.ஆர்.எல்.எவ் உம் புலிகளின் ஆயுத ஓடுக்கலால் தனது பல போராளிகளை இழந்து பின் தனது செயற்பாட்டை மட்டுப் படுத்திக் கொண்டது. விடுதலை அமைப்புக்கள் தமது மக்களுக்காக போராடும் உரிமைகளை புலிகளின் துப்பாக்கிகளினால் மட்டுப் படுத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.( ஈபிஆர்எல்எவ் மீது புலிகளின் ஆயுத ஒடுக்கலை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம்)
இன்று கிட்டு இல்லை, மாத்தையா இல்லை, சந்தோஷம் இல்லை, பிரான்ஸிஸ் இல்லை, ஜே.ஆர் இல்லை, லலித் அத்துலத் முதலி இல்லை. ஆனால் அதே ஆயுதங்கள், கொலைகள் ஏகபோக சிந்தனை இந்திய எதிர்ப்பு எல்லாம் இருக்கின்றன. கூடவே பிரபாகரனும் இருக்கின்றார்.
எட்டு சதுர கிலோ மீற்றருக்குள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி சுருங்கி விட்டது. தற்போது வரும் செய்திகளின் படி இப் பிரதேசத்தை சுற்றி நாலு புறமும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட புலிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பித்து விட்டது. வெளிநாட்டு புலி முக்கியஸ்தர்களின் வெளிநாட்டுத் தமிழர்களுக்கான போராட்ட அழைப்பின் ஈனக்குரல்கள் புலிகளுக்கு ‘தெளிவு’ விடும் நிலையில் வந்துவிட்ட ‘அபாய’ நிலையை கட்டியம் காட்டி நிற்கின்றது. நாளை……………?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்…… தெய்வம் நின்று கொல்லும்…… என்னவோ எல்லாம் நினைவில் நிழல் ஆடுகின்றது.
இன்று கிட்டு இல்லை, மாத்தையா இல்லை, சந்தோஷம் இல்லை, பிரான்ஸிஸ் இல்லை, ஜே.ஆர் இல்லை, லலித் அத்துலத் முதலி இல்லை. நாளை புலி இல்லை…..? பிரபாகரன் இல்லை…..? தமிழ் மக்களும் பிரச்சனையும் இருக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply