கருணாநிதியை சந்தித்து வைகோ உடல்நலம் விசாரித்தார் முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக பேட்டி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு 8.15 மணிக்கு சென்றார். அவருடன் ம.தி. மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளை, தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்பட நிர்வாகிகள் வாசலில் வந்து அழைத்து சென்றனர்.
கருணாநிதி மற்றும் அவருடைய மனைவி தயாளு அம்மாள் ஆகியோரை நேரில் சந்தித்து வைகோ உடல்நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும் உடன் இருந்தார். சுமார் 35 நிமிடம் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு, 8.50 மணி அளவில் வைகோ வெளியே வந்தார்.
கருணாநிதி உடனான சந்திப்பு குறித்து வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசியலில் என்னை வார்த்தவர் கருணாநிதி. அந்த நன்றியை நான் மறக்கவில்லை. அவருடைய உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து மனவேதனை அடைந்தேன். கருணாநிதி, திருப்பூர் துரை சாமியை அடையாளம் கண்டு புன்முறுவல் பூத்தார். எனது கையை கருணாநிதி பற்றிக்கொண்டார். அவர் விடவே இல்லை. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் விட்டேன்.
கருணாநிதி கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. கடந்த 2 மாதமாக என்னுடைய கனவில் கருணாநிதி வந்தார். அது ஏன்? என்று எனக்கு புரியவில்லை. கருணாநிதி என்னிடம் பேச முயற்சித்தார். தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் காரணமாக அவரால் பேசமுடியவில்லை. நான் அவரிடம் போய் வருகிறேன் என்று கூறியதும், அவர் சிரித்தார். அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள், செய்திகள் இருக்கிறது.
அவர் முழுமையான உடல்நலம் பெறுவார். மீண்டும் அந்த கம்பீரமான காந்த குரலில் பேசுவார். நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார். நிச்சயம் அவருடைய காந்த குரலில் உரையாற்றுவார். முரசொலி பவளவிழா வருகிற 5-ந்தேதி சென்னையில் நடக்கிறது. அந்த விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் என்னை அழைத்தார். அதை கருணாநிதியிடமும் தெரிவித்தார். நான் அதை ஏற்று விழாவில் பங்கேற்பேன் என்று கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருணாநிதி உடனான சந்திப்பு குறித்து ‘தினத்தந்தி’ நிருபருக்கு வைகோ அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற உடன் முதலில் தயாளு அம்மாள் அறைக்கு சென்றேன். என்னை கை நீட்டி யார் என்று தெரிகிறதா? என்று மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாளிடம் கேட்டார். அதற்கு வைகோ என்று அவர் பதில் அளித்தார். இதை கேட்டு மு.க.ஸ்டாலின் மற்றும் உடன் இருந்தவர்கள் அசந்துவிட்டனர்.
இதையடுத்து மாடிக்கு சென்று கருணாநிதியை பார்த்தேன். நான் கையில் பொன்னாடையை வைத்துக்கொண்டே அவரை பார்த்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதை பார்த்த அவருடைய கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. கருணாநிதி கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை, கனிமொழி எம்.பி. துடைத்தார்.
முரசொலி பவள விழாவில் பங்கேற்பதற்கு வைகோ வருவதாக துரைமுருகன், கருணா நிதியிடம் சொன்னார். இதை கேட்டதும், கருணாநிதி அழுதுகொண்டே சிரித்தார். கடந்த 2 மாதமாக என்னுடைய கனவில் வருகிறீர்களே? என்று சொன்னதும், கருணாநிதி உணர்ச்சிவசப்பட்டார். சென்று வருகிறேன் என்று சொன்னதும், தலையை ஆட்டுவதற்கு இஷ்டம் இல்லாமல் இருந்தார்.
உடனே நான் செல்லவில்லை, இங்கே இருக்கிறேன் என்று சொன்னதும் சிரித்தார். 10 நிமிடம் கழித்து, இன்றைக்கு சென்றுவிட்டு இன்னொரு நாள் வருகிறேன் என்று கூறியவாறு, கை கொடுத்து கும்பிட்டேன். அந்த சமயத்தில் என்னை பார்த்து சிரிப்பது போல சிரித்து, தலையை ஆட்டினார். பிரிய மனம் இல்லாமல், அவரை பார்த்தவாறு பின் நோக்கி நடந்து படிக்கட்டில் நின்று மீண்டும் வருகிறேன் என்று கூறிவிட்டு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுமார் 2½ ஆண்டுகளுக்கு பின்னர் கருணாநிதியை வைகோ சந்தித்திருக்கிறார். தற்போதைய சூழலில் வைகோ, கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங் களுக்கு முன்பு கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply