பெங்களூரு சிறையில் இருக்கும் ‘சசிகலா கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்ததை பார்த்தேன்’

கோலார் தங்கவயலை சேர்ந்த கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் நேற்று பெங்களூருவில் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

‘‘சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்கு வந்த பின்னர் சிறிது நாட்களிலேயே சசிகலா சிறை அதிகாரிகளை தனது கைகளில் வைத்து கொண்டு சிறை கைதிகளைபோல் அல்லாமல் சாதாரண மக்கள் போன்று சிறையில் வாழ்வதற்கான வசதியை வாங்கி உள்ளார்.

கைதிகளுக்கான சிறை நடைமுறையில் சசிகலா இல்லை. சிறை விதிமுறைகளை அவர் மீறி உள்ளார். இதுதொடர்பாக சசிகலாவுக்கு எதிராக பரப்பனஅக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடந்த மாதம்(ஜூலை) 29–ந் தேதி புகார் அளித்தேன். புகாரில், சசிகலா, இளவரசி, சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், சிறை தலைமை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என கூறி இருந்தேன். புகார் கொடுத்து 20 நாட்களுக்கும் மேலாகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த புகார் பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர், துணை போலீஸ் கமி‌ஷனரிடமும் அளித்தேன். சிறையில் சசிகலாவுக்கு துணையாக இருந்த அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதினேன். மனித உரிமை ஆணையத்திலும் புகார் செய்தேன். சிறையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். சசிகலா பிரச்சினைக்கு பிறகு சிறையில் உள்ள ஏழை கைதிகளை பார்க்க வரும் அவர்களுடைய உறவினர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே, சசிகலா மீது கர்நாடக அரசே கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். என்னால், தனிப்பட்ட முறையில் சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மீது வழக்கு தொடர முடியும். ஆனால், கர்நாடக அரசே இதை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். பணி இடமாற்றம் செய்யப்பட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவை மீண்டும் அந்த பொறுப்புக்கு மாற்ற வேண்டி கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவிடம் மனு கொடுத்து உள்ளேன். ரூபாவுக்கு சிறைத்துறையில் பணி வழங்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து இல்லை. மக்களின் கருத்து இதுதான்.

நான் கோலார் தங்கவயலில் இருந்து பெங்களூரு வந்தால் எனது நண்பருடன் எம்.ஜி.ரோட்டில் உள்ள ஓட்டலில் சாப்பிட செல்வோம். அப்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.ரோட்டில் உணவு சாப்பிட சென்றபோது முஸ்லிம்கள் அணியும் புர்கா உடை அணிந்து அங்கு நின்ற சசிகலாவை பார்த்தேன். சிறை கைதி எம்.ஜி.ரோட்டுக்கு ‘ஷாப்பிங்’ வந்தது நம்ப முடியாததாக இருந்தது. இதனை உறுதி படுத்தும் வகையில் சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்து அனைத்து வசதிகளை பெற்றதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியதை பத்திரிகைகளில் படித்தேன்.

வெளியில் தான் ஊழல் செய்தார்கள் என்றால் சிறையிலும் வந்து சசிகலா ஊழல் செய்து இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply