ஓசூர் எம்எல்ஏ வீட்டுக்கு சென்றார் சசிகலா: ரூபா அறிக்கை
பெங்களூரு பரப்பான அக்ரஹாரா சிறைக்கு அருகில் உள்ள ஓசூர் எம்எல்ஏவின் வீட்டுக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சென்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்ததாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநில முன்னாள் சிறைத் துறை டிஐஜி ரூபா, கடந்த சனிக்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 5 மாதங்களாக சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறி, சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், அதிகளவில் பார்வையாளர்களை சந்திப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சனிக்கிழமை கர்நாடக மாநில முன்னாள் சிறைத் துறை டிஐஜி ரூபா மவுட்கில் ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில், ”சிறைக்கு அருகில் உள்ள ஓசூர் எம்எல்ஏவின் வீட்டுக்கு, சசிகலா சென்று வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை சிறையின் நுழைவுவாயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் சிறையின் முதல் மற்றும் இரண்டாவது வாயிலில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா குறித்த தவறான தகவல்களை அளித்து உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகத்தை ஏமாற்றியுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 4-ம் தேதி சிறைத் துறை டிஐஜி ரூபா மவுட்கில் மாநில உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், ”சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறை விதிமுறைகளின்படி சசிகலா முதல் வகுப்பு வசதிகளை அனுவிக்க முடியாது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி அவர் முதல் வகுப்பு வசதியோடு சிறையில் வாழ்ந்து வருகிறார்” என்று கூறியிருந்தார்.
ரூபா மேலும் தன் அறிக்கையில் கூறும்போது, ”சிறையில் கைதிகள் அனைவரும் சிறை சீருடைகளையே அணிய வேண்டும். ஆனால் சசிகலா மற்றும் இளவரசி இருவரும் தங்களின் சொந்த உடைகளையே அணிகின்றனர். சல்வார் கம்மீஸ், நைட்டி, புடவை உள்ளிட்ட வண்ண உடைகளில் அவர்கள் வலம் வருகின்றனர்.
மேல் தளத்தில் தங்கியுள்ள சசிகலா 5 அறைகளை பயன்படுத்துவதை கண்டேன். இந்த அறைகளில் அவர் தனது சமையல் பாத்திரங்கள், துணிமணிகள், கட்டில், மெத்தை, எல்இடி டிவி, பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தார்.
சசிகலாவுக்கு விவிஐபி வசதி, நவீன சமையலறை, உணவு, உதவியாளர்கள் என பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
தெல்கி மீதும் குற்றச்சாட்டு
போலி முத்திரைத் தாள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் கரீம் தெல்கி மீதும் ரூபா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், ”தெல்கிக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக அவருக்கு புதிய எல்இடி தொலைக்காட்சி, சிறப்பு உணவு, தனிப்பட்ட டயர்ட் சார்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது
முறையான அனுமதி மற்றும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சிறைக் கைதிகளுக்கு சிறப்பு வசதிகளை வழங்குவது நீதிமன்றத்தை அவமதிப்பதோடு, அரசியல் சாசனத்தின் 14-வது அட்டவணையை மீறுவதாகும்” என்று கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply