தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய முடியாது: சட்ட நிபுணர்கள் கருத்து
அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒன்றுபட்ட அ.தி.மு.க.வினருக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.அ.தி.மு.க.வை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் டி.டி.வி.தினரகனும் அவர் உறவினர்களும் முதல்- அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது நீக்கி விட வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் டி.டி.வி.தினகரனையும் அவரது மன்னார்குடி உறவினர்களையும் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைக்கும் நட வடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஓசையின்றி ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்ததால் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்துள்ள டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏ.க் களையும் கடந்த செவ்வாய்க் கிழமை கவர்னரை சந்திக்க வைத்து கடிதம் கொடுக்க வைத்தார். அந்த கடிதத்தில், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. எனவே அவருக்கு கொடுக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம். அவருக்கு பதில் வேறு முதல்வரை தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அந்த 19 எம்.எல். ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் நேற்று நோட்டீஸ் அனுப்பினார். அதில் அவர், “கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவதால் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? இதற்கு ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து 19 எம்.எல். ஏ.க்களின் பதவியை பறிக்கும் பட்சத்தில் தமிழக அரசியல் களத்தில் அடுத்து என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இந்த நடவடிக்கை கை கொடுக்கும் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
ஆனால் 19 எம்.எல். ஏ.க்கள் நீக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடந்தால் அதில் தி.மு.க. ஜெயித்து ஆட்சியையும் கைப்பற்றி விடும் என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள். இந்த இரண்டில் எது நடக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் அலசி ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபாலால் நீக்க முடியாது என்று அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், சட்ட நிபு ணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
19 எம்.எல்.ஏ.க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க இயலாது என்பதற்கான காரணத்தையும் சட்ட விதிமுறைகளையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-
கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களும் முதல்- அமைச்சரை மாற்ற வேண்டும் என்றுதான் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்கள் நாங்கள் 19 பேரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகுகிறோம் என்றோ, வேறு ஒரு கட்சியில் சேரப் போகிறோம் என்றோ எதையும் சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது, 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். முடியாது.
சட்டசபையில் நடந்த எந்த நிகழ்ச்சிகளிலும் 19 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக நடக்கவில்லை. எந்த வாக்கெடுப்பிலும் மாற்றி வாக்களிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவர்களை தகுதி இழப்பு செய்ய கொறடா மூலம் சபாநாயகர் எதுவும் செய்ய இயலாது.
19 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் தனபாலுக்கு பதில் அளிக்கும் போது, “உட்கட்சி பிரச்சினை காரணமாக நாங்கள் தனியாக செயல்படுகிறோம்“ என்று விளக்கம் அளித்தால் சபாநாயகரால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. இந்த செயலுக்காக கட்சி சார்பில் மட்டுமே நட வடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு சேடப்பட்டி முத்தையா கூறினார்.
சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.சந்துரு இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-
சட்டசபைக்கு வெளியில் நடக்கும் விவகாரத்துக்காக 19 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே 19 எம்.எல்ஏ.க்கள் தகுதி இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை.
19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் கவர்னரை சந்தித்து தங்களது பிரச்சினைகள் தொடர்பாகத்தான் கடிதம் கொடுத்துள்ளனர். இதற்காக அவர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்ற கொறடாவால் கோர முடியாது. இது சட்டசபைக்கு வெளியில் நடந்த ஒன்று.
கவர்னரிடம் கடிதம் கொடுப்பதால் மட்டும் அவர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர். அவ்வளவுதான். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கைக்கு கொறடா கோரிக்கை விடுக்க முடியாது.
கொறடா என்பவர் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் அல்ல. அவர் சட்டசபைக்குள் கொறடா. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்தால் மட்டுமே அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க முடியும்.
சட்டசபைக்குள் நடக்காத ஒரு விஷயத்துக்காகத்தான் கொறடா பரிந்துரையை ஏற்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதை ஏற்று தகுதி இழப்பு செய்ய விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருக்க கூடாது.
இவ்வாறு நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.
மூத்த வக்கீல் கே.எம்.விஜயனும் இதே மாதிரியான கருத்தை வெளியிட்டுள்ளார். 19 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் குறித்து அவர் கூறி இருப்பதாவது:-
ஒரு எம்.எல்.ஏ. விதி முறையை மீறியதாக கருதப்பட்டால் சட்டத்துக்குட்பட்டு தான் அவர் மீது கொறடா உத்தரவிட முடியும்.
கவர்னரை சந்தித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பது, அந்த கட்சியின் மாண்பைத்தான் பாதிக்கும். இதற்காக எப்படி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ய முடியும். அதற்கு சட்டத்தில் இடம் இல்லை.
இவ்வாறு மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply