ஆப்கானிஸ்தான்: ஷியா மசூதிக்குள் ஐ.எஸ். தீவிரவாதி மனித வெடிகுண்டு தாக்குதல்- பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கின. நீண்ட காலமாக நடந்து வரும் இந்த போரில் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு அரசு படைகளிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்தது. அதன் பின்னர் அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்கள் படிப்படியாக தங்கள் நாட்டுக்கு திரும்பினர்.

தற்போது அங்கு சுமார் 8,400 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். எனினும் 15 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்தாலும், அரசு படைகளால் தலிபான்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அந்நாட்டின் 40 சதவீதம் பகுதிகள் தலிபான்களின் ஆதிக்கத்தின்கீழ் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், காபுல் நகரின் மையப்பகுதியில் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் காலா-நஜாரா மசூதி உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இங்கு தொழுகைக்காக ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் திடீரென்று துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்டது.

தொழுகை நடத்தி கொண்டிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் அங்கிருந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான். தொழுகை நடத்திய அந்த மசூதியின் இமாம் (மதகுரு) உள்பட 14 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் மேலும் 16 பேர் உயிரிந்துள்ளதாகவும், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானி இந்த தாக்குதல் ஆப்கான் மக்களுக்கு எதிரானது என கூறியுள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply