வடக்கில் அதிகரிக்கிறது டெங்கு ஒழிப்புப் பணியை முடுக்குங்கள்
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்துத் துறையினரையும் உள்வாங்கி டெங்கு பரவலைத் தடுப்பதற்கான பணிகளை முடுக்கிவிடுங்கள்.இவ்வாறு கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார், தேசிய டெங்கு ஒழிப்பு பணிப் பாளர் வைத்தியக் கலாநிதி ககிஸ்த திரேரா.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் தலைமையிலான குழுவினர் வடக்கில் டெங்கு அதிகரித்துள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் நேற்றுமுன்தினம் கலந்துரையாடல் நடத்தினார்.
தொற்று அதிகமுள்ளதாகக் கூறப்படும் சில பகுதிகளையும் அவர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். கலந்துரையாடலில் அவர் மேற்கண்டவாறு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் டெங்குத் தொற்று முன்னைய வருடங்களை விட அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்குத் தாக்கம் முன்னைய வருடங்களைவிட அதிகரித்துள்ளது.
குடாநாட்டில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 700 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இதே மாதம் வரையான காலத்தில் 600 பேர் மட்டுமே இனம் காணப்பட்டிருந்தனர்.
டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து துறைகளின் பணிகளையும் முடுக்கி விடுமாறு அவர் பணித்துள்ளார்.
இதேவேளை,டெங்குத் தொற்றுக்கு இலக்காகி இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 700 இற்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது:
தினமும் 20 பேர் நாளாந்தம் 15 தொடக்கம் 20 வரையானோர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
பருவமழை
ஓரிரு மாதங்களில் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பிக்கும் பருவம் வரவுள்ளது. அதன்போது டெங்குத் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது. இப்போதே இவ்வளவு எண்ணிக்கையில் டெங்குத் தொற்றுக் காணப்படும் நிலையில் மழை வரும்போது தொற்று மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு பெருமளவில் காணப்படுகிறது.
பொறுப்பு அனைவருக்குமே
டெங்கு நுளம்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் ஊடாகவே அதன் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அந்த முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். குப்பைகளை அகற்றுவது மக்களினதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் முக்கிய கடமை.
சுத்தம் அவசியம்
மருத்துவமனையைச் சூழவுள்ள பிரதேசம் சுத்தமாக இருக்க வேண்டும். டெங்குத் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு டெங்கு நுளம்புகள் தாக்குமாயின் பிரதேசம் முழுவதும் டெங்கு பரவும். மருத்துவமனைச் சுற்றாடலில் பொலித்தீன் கழிவுகள் காணப்படுகின்றன. அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிளும், வர்த்தகர்களும், பொதுமக்களும் இது தொடர்பில் உரிய கரிசனை கொள்ள வேண்டும் – என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply