நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கும்: சரத்குமார்
கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அவர்களுக்குள் என்ன பிரச்சனை நடக்கிறது என்று எனக்கு தெரியாது.
எம்.ஜி.ஆர்., உருவாக்கி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் கொடுத்த தீர்ப்பை அனைவரும் நிலை நிறுத்த வேண்டும்.
தினகரன் தரப்பினருக்கு என்ன பிரச்சனை என்று என்னால் கணிக்க முடியவில்லை. மக்களை சந்தித்து ஆட்சிக்கு வர முடியாத தி.மு.க.வினர் மறைமுகமாக ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். அதனை முறியடிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் கவர்னர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கும் என்று நம்புகிறேன். என்னை பொறுத்தமட்டில் அ.தி.மு.க.வை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளேன். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தினகரன் என்ற நிலைப்பாடு எனக்கு கிடையாது. மக்கள் பிரச்சனைக்காக முதல்வரை சந்தித்து பேசி வருகிறேன். மத்திய அரசு ஒரு சில விஷயங்களில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்களிப்பை தரும் தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் இல்லாதது வேதனையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply