ஹார்வே புயல் எதிரொலி ஹூஸ்டனில் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி
அமெரிக்காவில் ‘ஹார்வே’ என்ற புயல் நேற்று முன்தினம் தாக்கியது. இதனால் டெக்காஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் புயல் தாக்குதல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக டெக்காஸ் மாகாணத்தில் ஹூஸ்டன், விக்டோரியா, மற்றும் கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் ஹூஸ்டன் நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நிரம்பி வழிந்த தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. அதனால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அதில் இருந்து வெளியேறிய மக்கள் வீட்டின் கூரைகளிலும், காம்பவுண்டு சுவர்களிலும் ஏறி தஞ்சம் புகுந்துள்ளனர். ஹூஸ்டனில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படகுகள் உதவியுடன் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சாலைகள், தண்ட வாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் டெக்காஸ் மாகாணத் தில் 250 சாலைகள் மூடப்பட்டன.
ஹூஸ்டனில் உள்ள விமான நிலையங்கள் செயல்படவில்லை. அங்குள்ள ஒரு தளம் தண்ணீரில் மூழ்கி கிடப்பதால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புயல் வெள்ளத்தில் சிக்கி ஹூஸ்டனில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் மற்றும் வெள்ளம் பாதித்த டெக்காஸ் மாகாணத்துக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை (29-ந்தேதி) செல்கிறார். சேத பகுதிகளை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply