வங்காள விரிகுடா பிராந்திய மாநாட்டில் மஹிந்த: இந்தியப் பிரதமரையும் சந்திக்க ஏற்பாடு

புதுடில்லியில் நடைபெறும் வங்காள விரிகுடா நாடுகளின் மாநாட்டில் பங்கெடுப்பதற்காக புதுடில்லி செல்லும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இலங்கையின் நிலமைகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளார். 
 
இந்தியா, பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து, பூட்டான், நேபாளம், இலங்கை ஆகிய பிராந்திய நாடுகள் பங்குபெற்றும் வங்காள விரிகுடா நாடுகளின் தலைவர்கள் மாநாடு நாளையும், நாளை மறுதினமும் புதுடில்லியில் நடைபெறுகிறது.

தெற்காசியாவுக்கும் தென் கிழக்காசியாவுக்கும் பாலமாக செயற்படுகின்ற பல்தரப்பு தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளின் முன் முயற்சி அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாடே நாளை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையில் முன்னேடுக்கப்பட்டுவரும் யுத்தத்தை நிறுத்தக் கோரி தமிழகத்தில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் தருணத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் பாரிய எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்தியுள்ளது.

இனப்பிரச்சினைக்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக தீர்வொன்று முன்வைக்கப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியிருந்தார். 
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply