வவுனியாவில் நிகழ்ந்த டாக்டர் மீரா மொஹிதீனின் படுகொலை பேரதிர்ச்சியளித்துள்ளது : அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இடம்பெயர்ந்த மக்களுக்காக இரவு பகல் பாராது கடமையுணர்வோடு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய வைத்திய நிபுணர் மீரா மொஹிதீனின் படுகொலையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இப்படுகொலையைக் கேட்டு தான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் இப்படுகொலை குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இன, மத பேதமின்றி சகலருக்கும் சேவையாற்றக் கூடிய ஒருவரை இன்று முஸ்லிம் சமூகம் இழந்துள்ளது. இவ்வாறான சிறந்த புத்திஜீவிகளை படுகொலை செய்பவர்கள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து சமாதானத்தின் பால் சகோதரர்களாக உருவாக்க முயற்சி எடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதற்காகப் பாடுபட்டு உழைத்து வந்த வைத்திய நிபுணர் மீரா மொஹிதீனைப் படுகொலை செய்திருப்பது சமாதானத்தின்மீது விடுக்கப்பட்ட ஒரு தாக்குதலாகவே நான் உணருகின்றேன்.

இடம்யெர்ந்து வரும் மக்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வந்த வைத்திய நிபுணரின் சேவையை நான் நன்கு அறிந்துள்ளதுடன், அவருடன் மிகவும் நெருங்கி செயலாற்றி வந்துள்ளேன். நல்லொழுக்கமும் நற்பண்பும் கொண்டுள்ள அவர் இடம்பெயர்ந்த மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக தேவையான தரப்பினர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

வைத்திய நிபுணர் மீரா மொஹிதீன் தனது சேவைக்காலத்தில் அதிக காலத்தை இடம்பெயர்ந்த மக்களின் நலனைக் கவனிப்பதிலேயே செலவழித்து வந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் தற்போது அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கின்ற நிலையில் இவரது படுகொலை மருத்துவத் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகவே கருதப்படுகிறது.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், அன்னாரை ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தில் இறைவன் சேர்த்தருள பிரார்த்திக்கிறேன் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply