20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சயனைடு கொலையாளிக்கு தூக்கு ரத்து
திருமணம் செய்துகொள்வதாக கூறி 20 பெண்களை பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்ற ‘சீரியல் கில்லர்’ மோகன்குமாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தில் உள்ள மங்களூருவை சேர்ந்தவர் மோகன் குமார் (53). அங்குள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 2009-ம் ஆண்டு பண்டுவலாவை சேர்ந்த அனிதாவை (22) திருமணம் செய்துகொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை எனக் கூறி அவருக்கு சயனைடு மாத்திரையை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட அனிதா, ஹாசன் பேருந்து நிலையத்தில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, இதே பாணியில் மங்களூரு பஸ் நிலையத்தில் 2008-ல் ஹேமாவதி என்பவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. கர்நாடகாவில் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட பெண்களின் வழக்குகளை தனிப்படை போலீஸார் ஆராய்ந்தனர். அதில் 2003-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை கடலோர கர்நாடகாவில் மட்டும் 20 பெண்கள் சயனைடு கொடுத்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2007 அக்டோபர் 17-ம் தேதி சுள்ளியா பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை சயனைடு கொடுத்து கொல்ல முயற்சித்த மோகன் குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது 2003-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை 20 பெண்களை பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.
20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்ற வழக்கை மங்களூரு விரைவு நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2013-ம் ஆண்டு நீதிபதி பி.கே.நாயக், அனிதாவை கொன்ற வழக்கில் மோகன்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கினார்.
லீலாவதி, ரீனா ஆகியோரின் வழக்கிலும் மங்களூரு விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பேபி நாயக், காவேரி, புஷ்பா, வினுதா ஆகிய 4 பேரின் வழக்குகளில் மோகன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அனிதா வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மோகன் குமார் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ரவி மாலித், ஜான் மைக்கேல் டி’குன்ஹா ஆகியோர் அமர்வு, “அரசு தரப்பில் போதிய சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாததால் மோகன் குமாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் அவரை சிறையில் அடைக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
ஷாரதா, ஹேமாவதி ஆகியோரின் வழக்கில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மோகன் குமார் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுவரை 7 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 பெண்களின் வழக்குகள் மங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
ஆசிரியர், சயனைடு கில்லர் ஆன கதை:
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் மோகன் குமார், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். 1987-ல் மஞ்சுளாவை திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். முதல் மனைவியை பிரிந்த மோகன்குமார், ஸ்ரீதேவி ராய் என்பவரை 1993-ல் 2-வது திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். குடும்ப வாழ்வில் ஒழுக்கக்கேட்டுடன் இருந்ததால் பள்ளியில் இருந்து மோகன் குமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003-ல் 2-வது மனைவியையும் பிரிந்த மோகன் குமார், பெண்களை திருமண வலையில் சிக்க வைத்திருக்கிறார். அவரின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய பெண்களை வெளியூருக்கு அழைத்துசென்றுள்ளார். பிறகு கருத்தடை மாத்திரை என ஏமாற்றி, சயனைடு மாத்திரைகளை கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட சில நிமிடங்களில் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மோகன்குமார் மாட்டிக்கொண்டதற்கு முக்கிய காரணம் 20 பெண்களையும் ஒரே பாணியில் கொலை செய்ததுதான். 2009-ம் ஆண்டு பண்டுவலாவை சேர்ந்த அனிதா (22) கொன்றதை போலவே, 6 மாதத்துக்கு முன்பு ஹேமாவதி என்ற பெண்ணை கொலை செய்துள்ளார். இருவரின் செல்போன் எண்ணையும் ஆராய்ந்தபோது மோகன் குமாரின் தொலைபேசி எண் சிக்கியது. இதை தொடர்ந்து கர்நாடகாவில் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட பெண்களின் வழக்குகளை தோண்டியபோது, மோகன் குமாரின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply