ஆப்கானிஸ்தானில் 2012–ம் ஆண்டு கடத்தப்பட்ட அமெரிக்கா–கனடா நாட்டு குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு

கனடாவை சேர்ந்த ஜோசுவா பாயல் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கெயித்லான் கோல்மேனை திருமணம் செய்திருந்தார். இவர்கள் கடந்த 2012–ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்தபோது தலீபான் ஆதரவு பெற்ற ஹக்கானி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அப்போது கெயித்லான் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த தம்பதி கடந்த 5 ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இருந்தனர். இடையில் அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வந்த அமெரிக்க படைகளால், தம்பதியினர் சிறைவைக்கப்பட்டு இருந்த இடத்தை கண்டறிய முடியவில்லை.

இந்த நிலையில் ஜோசுவா –கெயித்லான் தம்பதியையும், அவர்களது 3 குழந்தைகளையும் பயங்கரவாதிகள் கடந்த 11–ந் தேதி குர்ரம் பள்ளத்தாக்கு வழியாக பாகிஸ்தானுக்குள் கொண்டு சென்றதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது. உடனே இது குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து அதிரடியாக களத்தில் இறங்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், பயங்கரவாதிகளுடன் தீவிர சண்டையிட்டு பாயல் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தின் போது பாயலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக எங்கே மறைத்து வைக்கப்பட்டு இருந்தனர் என்பது தெரியவில்லை. எனினும் பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள ஹக்கானி குழுக்களின் தலைமையகம் அல்லது அதற்கு அருகே உள்ள பகுதிகளில் சிறைவைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் நாட்டு குடிமக்களை பாகிஸ்தான் ராணுவம் மீட்டு இருப்பது அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஹக்கானி குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து இருந்த டிரம்ப், இது ஒரு ‘நேர்மறையான நடவடிக்கை’ என பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹக்கானி குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தேவையான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பத்துக்கு மரியாதை அளிக்கும் அறிகுறியாக பாகிஸ்தானின் இந்த ஒத்துழைப்பு அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மூலம் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு இருந்த அமெரிக்கா–பாகிஸ்தான் உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகள் விரைவில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவை திருப்திபடுத்தவே இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply