ஆஸ்திரியா பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு – 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவாரா?

ஆஸ்திரியா நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அங்கு 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, ஆஸ்திரியா. வியன்னாவை தலைநகராக கொண்ட இந்த நாட்டில் 183 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு அக்டோபர் 15-ந் தேதி (நேற்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல், அந்த நாட்டில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தேர்தலில் அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்து வருபவர், 31 வயதான இளம் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ்தான். இவர், ஓ.வி.பி., என்றழைக்கப்படுகிற பழமைவாத மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். தற்போதைய கூட்டணி அரசில் வெளியுறவு மந்திரி பதவி வகிக்கிறார். அந்த நாட்டின் மிக இளம் வயது வெளியுறவு மந்திரி என்ற பெயரை இவர் பெற்றுள்ளார்.

இந்தக் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இரண்டாவது இடத்துக்கு எப்.பி.ஓ. என்னும் தீவிர வலதுசாரி சுதந்திரா கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் (சோஷியல் டெமாக்ரட்ஸ்) போட்டி போடுகின்றன.

தற்போது பிரதமராக உள்ள சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் கிறிஸ்டியன் கெர்ன் (51), செபாஸ்டியன் குர்ஸ்சின் பழமைவாத மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துத்தான் ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்த கூட்டணியில் தொடர முடியாது என்று செபாஸ்டியன் குர்ஸ் போர்க்கொடி உயர்த்தியதின் விளைவாகத்தான் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் அகதிகள் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்தது. பொருளாதார வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்புகள், சமூக நீதி ஆகியவற்றுக்கு ஆதரவாக பிரசாரத்தின்போது, செபாஸ்டியன் குர்ஸ் குரல் கொடுத்தார்.

இந்த தேர்தலில் 64 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். காலையில் ஓட்டுப்பதிவு தொடங்கியபோது, வாக்குச்சாவடிகளில் குறைவான கூட்டம் காணப்பட்டதாகவும், பின்னர் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நின்று ஓட்டு போட்டதாகவும், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்ததாகவும் வியன்னாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி செபாஸ்டியன் குர்ஸ்சின் பழமைவாத மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால், அந்தக் கட்சி தீவிர வலதுசாரி சுதந்திரா கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 1980-களில் இருந்தே ஆஸ்திரியாவில் தொடர்ந்து கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி செபாஸ்டியன் குர்ஸ், பிரதமர் பதவிக்கு வந்தால் ஐரோப்பிய நாடுகளில் மிக இளம் வயது தலைவர் என்ற சிறப்பை அவர் பெற முடியும்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply