அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு: இலங்கை அதிபருடன் தமிழ் தலைவர்கள் சந்திப்பு

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்தது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கைகள் வலுத்த வண்ணம் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

இதே கோரிக்கை வலியுறுத்தி இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தீவிரவாத தடுப்பு சட்டத்தில் உள்ள கடுமையான ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்றும் எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் கடந்த 13-ம் தேதி இந்த போராட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள கவர்னர் செயலகம் முன்பு பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர்.

கடந்த 8 ஆண்டுகளாக 160-க்கும் மேற்பட்ட தமிழ் தலைவர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மூன்று பேருக்கு எதிராக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகள் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள அனுராதாபுரம் நீதிமன்றத்தில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

 

கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்த அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் காரை மறித்து தமிழர்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். பாதுகாப்பை மீறிய வகையில் தனது காரைவிட்டு இறங்கிவந்த மைத்ரிபாலா சிறிசேனா, எம்.கே. சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

பின்னர், மைத்ரிபாலா சிறிசேனாவிடம் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் தங்களது கோரிக்கையை எடுத்துரைத்தனர். இது தொடர்பாக, பரிசீலிப்பதாக அதிபர் உறுதி அளித்தார்.

இந்நிலையில், இலங்கையில் உச்சகட்டப் போரின்போது கைதான சுமார் 11 ஆயிரம் தமிழர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழ் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் நேற்று சந்தித்தனர்.

அவர்களின் கோரிக்கையை கேட்ட அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞர் ஜெயந்தா ஜெயசூரியா மற்றும் நீதித்துறை மந்திரி தலாத்தா அட்டுக்கோராலே ஆகியோர் வெளிநாடு சென்றிருப்பதால் அவர்களுடன் கலந்துபேசி இதுதொடர்பாக பரிசீலிப்பதாக மைத்ரிபாலா சிறிசேனா கூறியதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply