தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நூற்றுக்கணக்கான போலீசார் சோதனை

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தாஜ்மகால் இந்திய கலாச்சாரத்தின் சின்னம் அல்ல என்று கருத்து கூறி இருந்தார். உத்தரபிரதேச மாநில சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கப்பட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறும்போது, தாஜ்மகால் இந்தியாவின் களங்கம். இதற்கு இந்திய வரலாற்றில் இடம் கிடையாது என்று கூறி இருந்தார். பா.ஜனதா எம்.பி. வினய் கத்தியார் கூறும்போது, இந்து கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில் தாஜ்மகாலை கட்டி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இவ்வாறு பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் தாஜ்மகாலுக்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உத்தர பிரதேச தலைநகரம் லக்னோவில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்.100-க்கு நேற்று இரவு 9.40 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது.

அதில் பேசியவர் தாஜ்மகாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

இந்த தகவல் வந்ததும் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் ஆக்ரா நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே உஷாரான போலீசார் தாஜ்மகாலுக்கு விரைந்து சென்றனர். தாஜ்மகால் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 100 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

தாஜ்மகால் கட்டிடம் மட்டுமல்லாமல், அதன் வளாக பகுதி, தாஜ்மகாலுக்கு வெளியே உள்ள கடைகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இரவு 11 மணியளவில் சோதனை முடிவுக்கு வந்தது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, போன் மிரட்டல் போலியானது என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.

போனில் பேசியவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது. செல்போன் மூலம் பேசப்பட்டுள்ளது. அவர், தற்போது போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டார். போன் யார் பெயரில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வலை விரித்துள்ளனர்.

தாஜ்மகாலை நாளை மறுநாள் (26-ந்தேதி) முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சுற்றிப்பார்க்க இருக்கிறார்.

இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply