கந்துவட்டி புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: கலெக்டர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
கந்து வட்டி கொடுமை காரணமாக நேற்று முன்தினம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இசக்கிமுத்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கந்து வட்டி கொடுமையால் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஏழை- எளியவர்கள் பாதிக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையில் வாழ்க்கையை நடத்தி வரும் தகவல்கள் வெளியானபடி உள்ளது. கந்து வட்டி கெடுபிடி கொடுமையால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாதத்தில் 47 பேர் தற்கொலை செய்திருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கொங்கு மண்டலத்திலும் கந்து வட்டி கொடுமை மிகவும் அதிகமாக இருப்பது நேற்று அம்பலமானது. கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களிடம் ஒரு கும்பல் திட்டமிட்டு “கிட்னி”யை பறிப்பது தெரிந்தது. ரவி என்ற தொழிலாளி அந்த கிட்னி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டார்.
கொங்கு மண்டலத்தில் நிறைய விசைத்தறி தொழிலாளர்களே கந்து வட்டி கும்பலிடம் சிக்கி பரிதவித்தப்படி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் புகார்கள் இது தொடர்பாக நிலுவையில் உள்ளன.
எனவே கந்து வட்டி தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து ஏழைகளை வாட்டி வதைத்து கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக சில சமயங்களில் தனியாரிடம் பணம் கடன் வாங்குகின்றனர். இதனைப் பயன்படுத்தி கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவர்களை சட்டத்திற்கு புறம்பாக அதிக வட்டி கேட்டு வற்புறுத்துகின்றனர்.
இத்தகைய அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக புரட்சித் தலைவி அம்மா 2003-ம் ஆண்டு “தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003” என்ற சட்டத்தை கொண்டு வந்தார். இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தச் சட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து அதிக வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வட்டிக்கு பணம் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற தொகையை நீதிமன்றத்தின் மூலம் செலுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதீத வட்டி வசூல் செய்பவர்கள் தங்களிடம் பணம் பெற்றவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதனை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று, அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
அம்மாவின் ஆசியுடன் செயல்படும் இந்த அரசும் அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து பொது மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மாவினால் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003-ன் அடிப்படையில் அதீத வட்டி சம்பந்தமாக மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்கும்படி நான் மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
எனவே பாதிக்கப்பட்ட பொது மக்கள் எந்தவிதமான அச்சத்திற்கும் ஆளாகாமல், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை அதிகாரிகளையும் அணுகி, தக்க நிவாரணம் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply